வற்றா நதி...

வற்றா நதி...

அகநாழிகை பதிப்பகம் வெளியீட்டில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் படைப்பில் உருவான 'வற்றா நதி'...
உண்மையில் வற்றா நதி ஒரு ஜீவ நதி! <3



திருநெல்வேலி தூத்துக்குடி இடையே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றை சுற்றி நடந்த நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களைப்பற்றி அழகாய் தனக்கே உரித்தான எழுத்துக்களில் அம்புலி மாமாவின் பேரன் என்று சொல்லுமளவிற்கு மிஞ்சா வகையில் கைத்தேர்ந்த 'கதை சொல்லி'யாக தன்னைப் பரிணமித்திருக்கிறார், எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி​.

ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க உட்கார்ந்தால், வாசிக்கும் வாசகனின் கண்களையும் கைகளையும் வேறு வினைகளிலே கட்டுற செய்யாது புத்தகமுழுதையும் படித்துமுடித்து விடும்படியாய் உணரச் செய்ய வேண்டும். அது முழுக்க முழுக்க புத்தகத்தில் எழுத்தாளன் பிரயோகிக்கும் உணர்வுள்ள எழுத்துக்களால் அன்றி வேறால் அமையா. இவ்விலக்கணத்திற்கு சற்றும் சோடைப் போகாது சலசலத்து அழகாய் வீறுகொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது இந்த 'வற்றா நதி'.

இந்த வற்றா நதியில் குளித்து, களிப்புற்று,  சிற்சமயங்களில் கண்நீர் சிந்தி, வியந்து, கொண்டாடி, உறவாடி, பல கதாப்பாத்திரங்களோடு வாழ்ந்து, பயணித்த பேரானந்தமான திருப்தியை என்னால் உணரமுடிந்தது.

நதியானது தான்செல்லும் இடம் நல்லதோ கெட்டதோ வழியெங்கிலும் சிறுசிறு கிளைகளை உண்டுபண்ணி செல்வதோடு கடைசியில் நீலக்கடலில் சங்கமிக்கும். அவ்வழியிலேயே இந்த 'வற்றா நதி'யின் உள்ளே செல்ல செல்ல நிறைய கிளைகளுமுண்டு. அதில் செழுமைகளும் வளமைகளும் வனப்புடன் இருக்கும். வலிகளும் வேதனைகளும் ஏக்கங்களும் இறுக்கத்துடன் நிறைந்திருக்கும்.

அநேக இடங்களில் கிராமிய மணம்வீசும் பேச்சுவழக்கினை அச்சுப்பிசகாது உணர்வுகளை உள்ளது உள்ளபடியே எழுத்தில் தருவதென்பது அவ்வளவு எளிதல்ல. எழுத்தாளர் இதில் தன்பங்கை கச்சிதமாய் அப்படியே படைத்துள்ளார்.

தென்னை விவசாயியின் வேளாண் உழைப்பையும், அதன் செவ்விக்காக‌ அவர் மேற்கொள்ளும் சிரத்தையையும், ஆடு கோழி வளர்ப்பையும் சொல்லுவதோடு, காலத்தின் சாபத்தால் அவையாவும் கைவிட்டு போனபின்பு, அதே விவசாயியின் மனத்தில் உண்டாகும் அதிர்வலைகளையும் திறம்படவே காட்டியுள்ளார் நம் எழுத்தாளர். அதில் விவசாயியின் இறப்பைக் காட்டியதோடு, அவர்மகன் பின்வைத்து வளர்ந்த தென்னம்பிள்ளையின் மீதுசாய்கையில் தந்தை விவசாயியினுடைய ஸ்பரிசத்தை மக‌ன் உணர்வதாய்க் கூறும் அழகு இருக்கிறதே அலாதிதான்.

இருவிளம்பருவ இருபாலர்களுக் கிடையேயுள்ள பக்குவமான முதிர்காதலை சொல்லுகையில் கிளுகிளுப்பையும், கரிசல் புழுதியில் பிறந்து கைதேர்ந்த விமானஓட்டியாகும் லட்சியத்தை அடைந்தும் சந்திக்கும் தோல்வியாய் முடியும் பேராபத்தை சொல்லுகையில் பரிதாபத்தையும் உண்டுபண்ணும் எழுத்துக்கள், ஒரு இடத்தில் குடுப்பினையென்றால் சொந்தமண்ணில் வாழ்வதையும் அங்குள்ள மனிதர்களையும் நேசிக்கும் பேறேயாகும் என்று அழகுபட ஏக்கத்துடன் சொல்லி பயணிக்கிறது.

நான் ரசித்த ரம்மியமான பகுதியென்னவெனில் 'காற்றிலிடைத் தூறலாக'யில் நாயகன், கோவை ஆனைகட்டிக்கு இருபது கி.மீ தொலைவில் கேரள எல்லைக்குள் இருக்கும் நண்பனின் ஊருக்கு மேற்கொள்ளும் இருநாள் மகிழ்சுற்றுலா. இப்பகுதியினை படிக்கும் வேளையிலேயே மலைச்சாரல் நம்மைத் தீண்டி செல்லும். நாமும் சேர்ந்து களித்துப் பயணித்ததொரு உணர்வு வாசிப்பவரை ஆட்கொள்ளும் என்பதில் துளியிலும் ஐயமில்லை.

மாட்டுவண்டியக் கட்டிக்கிட்டு அதிலே தாய்மாமன்மார், அத்தைமார், பெரியப்பன்கள், சின்னப்பன்கள், பெரியம்மாள்கள், சின்னம்மாள்கள், அக்காள்கள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகளோடு பொடிசுகளும் எல்லாரும் சேர்ந்து பங்குனித் திருவிழாவிற்காக குலதெய்வ வழிபாட்டிற்காக செல்லும் அழகினையும், போகிறப்போக்கில் பாட்டியம்மாள் பாடும் பாட்டு, அதைக்கேட்டு தூங்கிவிடும் பொடிசுகளும், வண்டியினை வழிநெறிப்படுத்தும் பெரியவர்களும் என அவர்களோடு வாசிக்கும் நானும் அழகாய் பயணிக்கலானேன்.

அந்தப் பாம்படக்கிழ‌வி ஒற்றைக்கையில் பத்து பேரப்புள்ளைகளையும் தரதரவென இழுத்து சாமி பாரு சாமி பாரு என சத்தம் போட்டுக்கொண்டே ஓங்கி நிற்கும் பூடத்தைப் பார்த்து கைத் தூக்கிக் கும்பிட்டு முணுமுணுக்கும்போது முச்சூடா அது கண்ணு கலங்கி நிக்கிறத சொல்லுற எழுத்துக்களைப் படிக்கிறப்போவே, என் அப்பத்தாளின் நியாபகம் தலைக்கேறி என்கண்களும் நீரை வார்த்திருந்தன‌.

அத்தோடு நிக்காம, முன்பெல்லாம் கரையில் செரட்டியை வைத்துத் தோண்டினாலே ஊத்துத்தண்ணி பொங்கிவரும். இப்போ மண்ண எல்லாம் அள்ளி அள்ளி நீர்மட்டமும் கீழேப் போய்விட்டது. முன்பெல்லாம் பேரப்பிள்ளைகள் எல்லா சொந்த சுறுத்துகளுடன் வாழ்ந்திருந்தனர். இப்போ உள்ள பேரப்பிள்ளைகள் சின்னப்பன் பெரியப்பன் உறவெல்லாம் என்னவென்று கேட்கும் அளவிற்கு வாழ்க்கைபோய் கொண்டிருக்கிறது என்பதை சொல்லி மனத்திலே கனமேற்றுகிறார் நம் எழுத்தாளர்.

அதிலும் அவர்மட்டும் மாறாததை "அந்த நெலா மாறிருக்காவோய். இல்ல மாறிருக்கான்னு கேக்கேன். பின்ன நான் மட்டும் என்ன மசுத்துக்கு மாறனுங்கேன்" என்று சொல்லும் இடத்தில் நம்மனத்தை கொள்ளையடிக்கிறார். இதனை உணர்ந்து படிப்பவர்களின் மனத்தில் ஏதோ ஒன்றை நறுக்கென்று உணர்த்திவிட்டுத்தான் போகும் நிச்சயமாக!

தொடர்ந்து பயணித்து வரும்வழியில், உறவுகளில் தலையாய உறவின் முறையற்ற உறவினால் மனமுடைந்த உறவால் தலையாய உறவும் தலையாரியும் வெட்டிக்கொலையுண்டாக்கிய இரத்தக்காட்சிகளும் எழுத்தில் எளிதாய் பிரதிபலித்தன. அதன்பின் பேராச்சிக் கதைகள் சொல்லும் பெரியக் கிழவியும் நம்மை சற்றுநேரம் கூடவே ஆக்கிரமித்துக்கொள்வாள்.

கூடன்குளம் அண்மின்நிலையம், விஜயநகரிய அணுமின்நிலையத்தில் எரியூட்டப்படுகின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் ஒரு ஊரே சந்திக்கப்போகின்ற சொல்லவொவ்வா பிரச்சினைகள், கருவிலேயே சிசுக்களின் உருக்கலைப்பு, கருவே அழியும் அபாயநிலை ஏற்பட்டது நம்மைப்போன்ற தூங்கிபோனவர்களால்தான், இனியாவது தூங்காமல் இருந்து கொலைகளைத் தடுப்போம் என்கையில் எழுத்தாளரின் சமுதாயத்தின் மீதான அக்கறையும் துடிப்பும் 'பளிச்'.

மரகதம் பெரியாச்சியின் வீட்டுநிலைக்கதவைப் பற்றியும் அக்கதவின் இரும்புப் பூண் கொக்கியைப்பற்றியும் பெரியாச்சி காட்டிய அன்பைப்பற்றியும் முன்பொரு காலத்தில் அங்கு நடந்தநிகழ்வுகளையும் கூறிவிட்டு, பின்னர் ஒருகாலத்தில் அப்பேர்பட்ட வீடானது சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்ததை சொல்லும் பொழுதும், அந்தவீட்டினுள் நுழைந்து செல்கையில் மேல்மதிலில் தன் தலை இடித்துக்கொண்ட பொழுது "இப்போது மட்டும் தடவி விட பெரியாச்சி இருந்தால் எப்படி இருக்கும்" எனச் சொல்லும் பொழுதும் என்மனம் கசிந்தது.

அப்படியே போகிறப்போக்கில் வற்றா நதியில் பயணித்து இருக்கும் பொழுது ஒரு இடத்தில் உரையாடல் ஒன்று 'டீயும் தம்முமாக பேசிட்டு இருந்தோம்' என்று வருகிறது. அந்த இடத்தில் நம் எழுத்து ஆளர், அடைப்பிக்குறிக்குள் "புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு" என்று எழுதியிருந்தது, உண்மையில் வாசிக்கும் வாசகனின் எதிர்பார்ப்புகளை ஒளி‍~ஒலி அளவிலும் மிஞ்சிவிடும் போலுண்டு. அருமை!

இப்படி அவர்வாழ்ந்த மண்ணைச் சுற்றியே நடந்தப்பல நிகழ்வுகளை நல்ல ஒரு எழுத்தாளராய் எழுதி நிரூபித்திருக்கிறார். இவரது படைப்பு நூறு பக்கங்களையேக் கொண்டிருந்தாலும் அதனுள்ளேயே இவ்வளவையும் மாணிக்கமாய் தரவியலும் என்பதையும் நிதர்சனமாக்கி யிருக்கிறார்.

அகநாழிகை பதிப்பகம் வெளியீட்டில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் படைப்பில் உருவான 'வற்றா நதி'...
உண்மையில் வற்றா நதி ஒரு ஜீவ நதி! <3

இன்னும் நிறைய நூல்கள் எழுதிட எழுத்தாளருக்கு எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக எழுத்தாளரின் எழுத்துக்கள் விருதுகளுக்கு சொந்தமாகும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன், <3
செ. அங்குராசன்
26‍.06.2016

No comments: