'சிமோனிலா கிரஸ்த்ரா' ஒரு அட்டகாசம்!

எழுத்தாளர் மாதவன் ஸ்ரீரங்கம் அவர்களின் படைப்பில் பார்வதி படைப்பகத்தின் வெளியீடாய் வரப்பெற்ற 'சிமோனிலா கிரஸ்த்ரா' என்ற சிறுகதைகளின் தொகுப்பின் தனிப்பட்ட எனது வாசிப்பானுபவமே இது.


மாதவனின் அனைத்து கதைகளிலுமே இருக்கும் தனிச்சிறப்பு என்னவெனில் வாசிக்கத் தொடங்கி முழுதும் படித்து முடிக்கும் வரையில் குன்றாத சுவாரஸ்யமே அது. இதுதானே வேண்டும் ஒரு வாசிப்பாளனுக்கு, எழுத்தாளனிடமிருந்து.

கதைகளினுடைய காட்சிகளும் கதாபாத்திரங்களும் ஓளிபட்டு பொருள்பின் தொடரும் நிழலினை போன்று நம் மனத்தை சிறிது நாட்களுக்கு பின்தொடரும் இயல்பினைக் கொண்டது. அவ்வளவிற்கு மனத்தில் படத்தினை ஓட்டி அருமையாய் கதையாடியிருக்கிறார்.

அதற்காக இவர் கையிலெடுக்கும் கதைக்களங்களும் புனைவுகளும் பிரமாதம். அப்படியே பார்த்தாலும் ஒவ்வொரு கதைகளும் நீதிக்கதைகளோ சமூக விழிப்புணர்வுக் கதைகளோ கிடையாது. நிற்க, அதே சமயம் ஒவ்வொன்றும் யதார்த்தக் கதைகளாகும். கற்பனையோடும் நிஜத்தோடும் உண்மையோடும் நிழலோடும் புனையப்பட்ட உணர்ச்சிக்கொண்ட கதைகளாகும்.

இவ்வாறாக வாசிப்பாளனை இருக்கின்ற சூழலினிலிருந்து சற்று அவற்றினுள்ளே இழுத்துச் செல்லுகின்றன சில கதாபாத்திரங்கள். அவர்களில் ரூடோ, பழனிச்சாமி, வனத்தலைவி, சிமோனிலா கிரஸ்த்ரா, ராணுவ அதிகாரி, ஸ்தீரிபாட் சின்னையன், சாம், எமிலி, நிழலாய் தொடர்வேன், சண்முகம், பெயர் மறைக்கப்பட்ட டாக்ஸி டிரைவர் ஆகிய கதாப்பாத்திரங்கள் நெஞ்சில் நிறைந்தவர்கள்.

ஆங்காங்கே ஊர்வழக்கு பேச்சுநடையை அப்படியே உருவார்த்திருந்தது மேலும் சிறப்பு. அவ்வப்போது இடைச்செருகலாக நல்ல தூய தமிழ்ச்சொற்களின் பயன்பாடு, அமுது. கதைகளுக்கு தலைப்பு வழங்கியிருக்கும் நேர்த்தி, அழகு.

ஆகமொத்தம் வாசிப்பாளனின் வாசிப்பனுபவத்தை திருப்தி செய்கிறது எழுத்தாளரது 'சிமோனிலா கிரஸ்த்ரா'.

'சிமோனிலா கிரஸ்த்ரா' ஒரு அட்டகாசம்!


வாழ்த்துகளும் அன்புகளும்...
செ. அங்குராசன்
12-07-2016