யானைகளின் வழித்தடங்களை நோக்கி ஊர்க்குருவிகளின் ஓர் பயணம்...




என்னதான் நம் நாட்டின் தேசிய விலங்கு புலி என்றாலும், நமது தேசிய பாரம்பரிய விலங்கு 'யானை' என்பது மறுக்கவோ மறக்கவோ இயலாதவொன்றாகும். 

யானைகளை மனிதன் தனக்கேற்றவாறு பழக்கப்படுத்தி பண்டைக்கால போர்களிலும் கோயில்களிலும் மாடவீதிகளிலும் கேளிக்கை விளையாட்டுக்களிலும் உலாவரச் செய்திருக்கின்றான். இப்படி வனவிலங்கினை தன் இடத்திற்குள் கொண்டுவந்து துன்பப்படுத்தி மகிழ்ந்து கொண்டது போதாதென, அவற்றின் வாழிடம் மற்றும் வழித்தடங்களை அபகரிக்கும் பொருட்டு ஆக்கிரமிப்புகளை உண்டுபண்ணுவதோடு, முழுப்பகுதிகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பல வழிகளில் கைப்பற்றி பேரானந்தம் கொண்டு நிற்கிறான், நவீன கால மனிதன். 

யானைகள் பொதுவாக ஒரே இடத்தில் இருப்பதில்லை. உணவுக்காக, தண்ணீருக்காக, இனவிருத்திக்கு இணைத்தேடி கூடுவதற்காக என ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் உயிரினங்கள். இவற்றை பின்தொடர்ந்தால் தம் உணவு, நீர்த்தேவைகள் பூர்த்தியாகும் என பின்தொடரும் மற்ற வன உயிரனங்கள் ஏராளம். இப்படி உண்மையில் காட்டுயிரினங்களின் தலைவனாக இலங்குகின்றன, யானைகள். 

அப்பேர்ப்பட்ட பேருயிரான யானைகள் சமீப காலமாக பல சூழ்ச்சிகளால் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றன, அத்தோடு வனத்தாவரங்களும் உயிரினங்களும் அழிந்து வருகின்றன என்பது கூடுதல் வருத்தம். 

நேரே சென்று பார்த்தால் தான் உண்மை நிலவரம் என்னவென்று தெரிய சாத்தியம் என்கையில், அதுவும் சாத்தியமானது நம் இளந்தமிழகம் இயக்கம்​-இன் ஊர்க்குருவிகள் மூலமாக. 

யானை வழித்தடங்களாக கோவை, மேட்டுப்பாளையம், கல்லாறு, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, விளாமரத்தூர், பவானிசாகரம் ஆறு, தடாகம், மாங்கரை, கொண்டலூர், மருதமலை, அனுபாவி உள்ளிட்ட இடங்களுக்கு வன சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு ஊர்க்குருவிகளும் சேர்ந்து பயணித்தோம். 

அங்குள்ள இருளரின, மலைவாழ் பூர்வக்குடி மக்களை சந்தித்தும் பேசியும் பேசச்சொல்லி கேட்கும் பொழுது யானைகளின் மீதான அவர்களின் பார்வை என்னவென்று தெளிவாகவே அறிய முடிந்தது. அப்பகுதியில் வாழும் வன மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாயிலாக எங்கள் கண்களால் ஆக்கிரமிப்புகளை காண முடிந்தது. அதற்காக அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் என்னென்ன, கோரிக்கைகள் என்னென்ன, கண்ட தீர்வுகள் என்னென்ன, மனக்குமுறல்கள் என்னென்ன, என யாவையும் நெஞ்சுணர அறிய முடிந்தது. மனம் கனத்தே போய் இருக்கிறது. எப்படியாவது போராடி நல்ல ஒரு தீர்வினை கண்டே தீரவேண்டும் என என்னுள்மனது துயிலை மறந்து கண்மூடினாலும் கனவுகளிலும் 'எங்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லையா?' என சொல்லுவது போல் கண்ணீர் வடித்த தடத்துடன் யானைக் கண்கள். 

ஊளை ஊடகங்களும் தன் பங்கிற்கு, "நகரப்பகுதிக்குள் யானைக்கூட்டம் நுழைந்து அட்டூழியம், பயிர் நாசம்" என செய்தியிட்டு பணப்பையை நிரப்பிக்கொள்கிறது. அவர்கள் "ஏன் மனிதர்களுக்கு வனத்தில் என்ன வேலை? மனிதர்கள் வனப்பகுதியினை ஆக்கிரமித்து யானைகளின் வழித்தடத்திற்கு இடையூறு விளைவிக்கிறார்கள்! " என தங்களைப் பார்த்து கேள்விக்கேட்டும் அதனை செய்திகளாக வெளியிடும் திராணி அற்றவர்களாகி இருக்கிறார்கள். 

யானைகளுக்கும் மனிதர்களைப் போன்று இப்பூவுலகில் வாழ சம உரிமைகளுண்டு. இதனை மீறி அவைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ள கல்வி, ஆராய்ச்சி, மருத்துவ, ஆன்மீக, மதம் சார்ந்த பல நிறுவனங்களும் தனியார்க்கு சொந்தமான மின்வேலிகளிட்ட தோட்டங்களும், பண்ணைகளும், செங்கல் சூளைகளும் மீது தக்க நடவடிக்கை எடுத்து, இழுத்து மூடப்பட்டு, இடித்து தள்ளப்பட்டு, மீண்டும் வனத்தை வனமாக மீட்டெடுக்க வேண்டும். பத்திரமாக வனத்தை முழுமையாக வன உயிரினங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இயற்கையோடு மோத நினைத்தால் விளைவுகள் கடுமையாக வந்தே தீரும் என்ற உண்மை தெரிந்தும் கண்மூடி வனத்தை கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். 

கடந்த சனி மற்றும் ஞாயிறு, இரண்டு நாட்களும் நிறைவாய் அமைந்தது ஊர்க்குருவிகளின் யானைகளின் வழித்தடத்தை நோக்கிய பயணம்... இது தொடர்பாக விரிவான தனித்தனி மற்றும் நீண்ட கட்டுரைகள் கண்டிப்பாக எழுத வேண்டுமென இருக்கிறேன். 

ஊர்க்குருவிகளும் இதை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்று ஆய்ந்து அறிவிக்கும் என்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

செ. அங்குராசன்
09.08.2016