சில நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்தில் எதேச்சையாய் நம்மை சிந்திக்கவைக்கக்கூடும். அதுவே நிகழ்வின் இடம், பொருள் பொறுத்து அதன்வழி நம் சிந்தனையிலினின்று பாரத்தோடு கூடிய வலியானதாய் மாறவும்கூடும். இத்தகையச் சுமையை இறக்கிவைக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகளும் நமக்கு கிடைக்கப்பெறும். ஒருமித்தமனதோடு அதை ஏற்றுக்கொண்டு முடித்துவிட்டு கடந்தால் நொடிப்பொழுதில் மனத்தில் திடீர் ஒரு எடைக்குறைவு உண்டாகி வெற்றிடம் போல் உருவாகி அலாதியான தன்னிறைவான மகிழ்ச்சி பெருகியே தீரும். அது எதுவாகினும்.
சாலையைக் கடக்கையில் அன்னியர் ஒருவர் என்னிடம் வந்து "சாப் ஆப்கோ ஹிந்தி மாலுமே க்யா" என்றார். அவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கையிலேயே நான் அவரையும் அவருக்கு அருகில் சற்றுத்தூரத்தில் ஒரு குழந்தையோடு ஒரு பெண்மணி நின்றிருப்பதையும், அந்தப்பெண் அவ்வப்போது எங்களை நோக்கி பார்த்துவிட்டு திரும்பிக்கொள்வதுமாய் இருப்பதையும் கவனித்துவிட்டேன். இந்தக்காட்சிகளைப் பார்த்தும் அவர் வினவிய கேள்வியையும் கேட்டபின்னர் எனக்குள்ளே ஓர் உள்ளுணர்வு. 'நம்மிடம் இருந்து ஏதோ பொருள்தான் எதிர்பார்த்து நிற்கிறார்' என்றும் 'இவர் உண்மையானவர் கிடையாது. ஏமாற்றி பணம் வசூலிக்கிறார் போலும்' என்றும் தோன்றியது. ஆகவே அவ்விடத்திலிருந்து நகரும்பொருட்டு 'சாரி' எனக்கூறிவிட்டு கடந்தும் விட்டேன்.
சிறிது தூரம் கடந்தபின்பு மீண்டும் அவர்களை நோக்கி ஒருபார்வையை வீசினேன். அவர்களோ சாலையைக்கடந்து வரும் மற்றவர்களிடம் கேட்பதை தொடர்ந்திருந்தார்கள். ஒருகணம் நின்று யோசித்துவிட்டு வீடு திரும்பியாயிற்று.
அன்றாடம் இது போன்று ஆயிரம் நிகழ்வுகள் நம்மைச்சுற்றி நடந்தாலும் அந்த நிகழ்வு மட்டும் ஏனோ என் மனத்துள் உறுத்திக்கொண்டே இருந்தது. தூக்கமும் வரவில்லை. தூங்குவதற்கு கண்ணை மூடினாலும் அந்த நபர் அருகே வந்து 'சாப் ஆப்கோ ஹிந்தி மாலுமே க்யா' எனக்கேட்பது போன்ற ஒரு பிரமை. கூடவே அதே பெண்மணி அந்தக்குழந்தையோடு நிற்பது போன்று. என்னடா இது என்று தலையைப்பிய்த்துக்கொண்டு வலப்புறம் இடப்புறம் என மாற்றி மாற்றி ஒருசாய்த்துப்படுத்தும் உருண்டும் புரண்டும் தூக்கம் வந்தபாடில்லை. பேசாமல் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து வந்திருந்தாலாவது நிம்மதியாய் இருந்திருக்கும் போலும் என்ற மனநிலைக்கு உள்ளாகியாயிற்று. இனிமேல் அங்கு சென்று பார்த்தால் அவர்கள் அங்கு இருப்பார்கள் தானா. ஒருவேளை அவர்களுக்கு உண்மையிலேயே இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்து உதவிக்கேட்டு நிற்கையில் செவிமடுக்காது கிளம்பிவந்துவிட்டோனோ. இது போன்ற பல கேள்விகள் வரிசையாய் என்னை ஒரு குற்றவாளியாக எண்ணுமளவிற்கு வந்தவண்ணம் இருந்தது. உண்மையில் அதுவும் குற்றம் தானே.
இரவும் கடந்தது. பொழுதும் விடிந்தது. காட்சிகள் மாறின. ஆட்களும் மாறினார்கள்.
கையில் சுத்தமாய் பணம் இல்லை. பணம் எடுக்கலாம் என்று தானியங்கி பணம் வழங்கி இருக்கும் ஒருகடையை நோக்கி சென்று கொண்டிருக்கையில் கடையின் வாசலில் நல்ல அடர் கருப்பானதொரு நிறத்தில் மெலிந்த தேகத்தோடு பழைய சேலை ஒன்று உடுத்திய இளம்பெண் ஒருத்தி இடுப்பில் ஒரு கைக்குழந்தையோடு நின்றிருந்தாள். என்னைப்பார்த்ததும் என்னை நோக்கி ஓடிவந்தாள். நான் சற்று பதறியே போனேன். அருகில் வந்ததும் சற்று மூச்சடைக்க இளைத்தப்படி ஆசுவாசப்படுத்திக்கொண்டு "அண்ணா.. சாப்பாடு எதாச்சும் வாங்கிக்கொடுண்ணா. கொழந்த இருக்குணா" என்றாள். முன்பே பாக்கெட்டில் இருந்து எடுத்து வைத்திருந்த பத்து ரூபாய் நாணயத்தை அவளது கையில் திணித்துவிட்டு சென்று கொண்டே இருந்தேன். பணம் எடுத்துவிட்டு திரும்புகையில் மீண்டும் வந்து வழிமறித்ததோடு சாப்பாடு ஏதாச்சும் வாங்கிக்கொடுண்ணா என்றபடி குட்டிப்போட்ட பூனையொன்று அங்குமிங்கும் சுற்றுவதைப் போன்று என்னை வட்டமிட்டாள். நான் எதுவும் கண்டுகொள்ளாததைப்போன்று அவ்விடம் விட்டு அகன்றேன்.
அவளின் தேவை பொருளல்ல, பணமல்ல, வயிறாற ஒரு வேளை உணவு. திரும்பி அவளைப்பார்க்கையில் வேறு யாரேனும் வாங்கித்தருவார்களா என்ற எதிர்பார்ப்போடு சுற்றும் முற்றம் நோக்கியபடியிருந்தாள். அருகில் ஏதேனும் சாப்பாட்டுக்கடை இருக்கிறதா எனப்பார்க்கையில் அதிகமில்லை. அப்படியே இருந்தாலும் மாலை 5 மணி என்பதால் மதிய உணவும் இருக்காது இரவு உணவும் செய்திருக்கமாட்டார்கள். என்ன செய்வது என வெறும் கையைப்பிசைந்து கொண்டு நின்றிருக்கையில் ஒரு சிறிய கடையின் பெயர்ப்பலகை தூரத்தில் தெரிந்தது. அங்கு சென்று கேட்கையில் நல்ல வேளையாக எலுமிச்சை சாதமும் சாம்பாரும் வெஞ்சனத்திற்கு வண்ணவண்ண சிறுசிறு அப்பளங்களும் இருந்திற்று. இரண்டு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து நடையைக்கட்டினேன். இன்னொரு பொட்டலமானது சாலையோரம் அமர்ந்திருந்து தன் மகவுக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த இன்னொரு பெண்ணொருத்திக்கு. பார்ப்பதற்கு அவளை ஒத்த சாயலிருந்தது. அவளோடு தான் இவளும் வந்திருக்கக்கூடும் என்பதனால் வாங்கியாயிற்று. உண்மையும் அதுதான் என்பது பொட்டலங்களை அவர்களிடம் கொடுக்கையில் அறியமுடிந்தது. இருவரும் ஒரு புன்னகையோடு இன்முகத்துடன் வாங்கிக்கொண்டார்கள். வாங்கிய வேகத்தில் உள்ளே இருப்பதை ஆவலுடன் பிரிக்கமுற்பட்டார்கள். அவ்வேளையில் அவர்களிடம் "இதுதான் கிடைத்தது" என்றேன். அவர்கள் என்னை பார்த்து வார்த்தைகள் ஏதுமின்றி தலையை சரியென அசைப்பதுபோல் அசைத்துக்கொண்டு மீண்டும் ஒரு புன்னகை அளித்தபடி பொட்டலங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். நானும் அவர்களிருந்தவிடம் இருந்து கிளம்பி பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தேன். நான் வந்ததும் பேருந்தும் வந்தது. இருக்கையும் கிடைத்தது. சுமையும் இறங்கியது.
அங்குராசன்.
( மாதிரிப்படம் )

No comments:
Post a Comment