கொரங்கி, சமீபத்தில் வாசித்து முடித்த சிறுகதைத் தொகுப்பு.
இத்தொகுப்பில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளன. அனைத்துக் கதைகளும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. ஒரு சாதாரண மனிதனின் நினைவில் அழியாது தேங்கி இருக்கப்பெற்ற மனிதர்களின் பலத்தரப்பட்ட நினைவுகளின் தொகுப்பாகத் தான் இப்படைப்பு இருக்கவேண்டும். வாசிக்கையில் சிலவேளை உங்களின் நிகழ்காலத்தை விட்டு கடந்தகால நினைவுகளின் உலகத்துக்குள் கால இயந்திரம் மூலம் பயணிக்கவும் நேரிடலாம். நானும் பயணித்தேன். பல இடங்களில் என்னைக்காண முடியாவிட்டாலும் எனக்கு கற்பிக்கப்பபட்ட பல மனிதர்களின் கதைகளைக்காண முடிந்தது. மனித வாழ்வில் உறவுகள் இன்றியமையாதது. உறவுகள் ஒரு மனிதனை சமூகத்தினுடன் இணைத்துக்கொள்ளும் பாலங்களாக இருக்கின்றன. ஒரு மனித வாழ்வில் பல உறவுகள் கிடைக்கின்றன. உறவுகளைச்சுற்றியே மனிதர்களின் உணர்வுகள் பின்னப்படுகின்றன. ஆக உறவுகளின் ஒவ்வொரு அசைவும் மனிதனுள் அதற்கேற்ப உணர்வுகளை உண்டுபண்ணுகின்றன. அந்தந்த உணர்வில் ஒன்றி மனிதனும் திளைக்கிறான். பழைய உறவுகள் முடிந்து புதிய உறவுகள் வந்தாலும், உணர்வுகள் மாறாது அந்தந்த உறவுக்கேற்ற தாக்கத்துக்கு ஏற்ப அவை வினையளித்துக் கொண்டுதானிருக்கும். ஒரு மனிதனின் நினைவில் வாழ்கின்ற கடந்தகால மனிதர்களின் உறவுகள் தந்த உணர்வுகள் அனைத்தும் ஒருவகையில் இன்றைய நாளுக்கான அனுபவத்தின் முன்னோடிகளாக அவனுக்கு நிச்சயம் விளங்கும். அவை நமக்குள் எப்போதும் ஒரு நம்பிக்கையை உண்டுபண்ணும். இன்னும் சொல்லப்போனால் அவையாவும் நமக்கு ஒரு பொக்கிசக்குவியல் எனலாம்.
கொரங்கியில் வருகின்ற சிறுகதைகள் நம்மிடம் நிறையவேப்பேசுகின்றன. சொந்தங்களாலும் பந்தங்களாலும் எப்படியான வாழ்வு வாழ்ந்திருக்கிறோம் / வாழ்கிறோம் என்பதனைப் பேசிச்செல்கின்றன. அதுவே நாம் எத்தகைய அன்பு சூழல் நிறைந்த வாழ்வை தற்போது இழந்திருக்கின்றோம் என்பதனையும் சொல்லாமல் சொல்கின்றது எனலாம்.
கொரங்கி எழுத்தாளர் திரு. மு.வெங்கடேஷ் அவர்களுக்கு இதுவே முதல் சிறுகதைப்படைப்புத் தொகுப்பு எனத்தெரிய வருகின்றது. ஒரு புதிய இளம் எழுத்தாளரிடமிருந்து ஒரு வாசகன் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகள் இவரது படைப்புகளில் கணக்கச்சிதமாக அமையப்பெற்றிருக்கின்றது என்றே சொல்லவேண்டும். பெரும்பாலான இடங்களில் கொரங்கியில் பின்பற்றியிருக்கிற எழுத்துநடையானது தென் தமிழக மாவட்டங்களில் பேசப்படும் ஊர்வட்டாரப்பேச்சு வழக்கினைத் தழுவியே அமைந்துள்ளது. இது வாசிக்கையில் நிச்சயம் கூடுதல் விறுவிறுப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்தும். நகரமயமாதலில் ஊர்வழக்குப்பேச்சு சொற்களுமே அறுகிவருகின்றன என்பது தொடர்பாக நான் சமீபத்தில் நண்பர்களிடம் ஒரு பெரிய கலந்துரையாடலே நடத்தினேன். இது தாய்மொழிப்பற்று தவிர்த்து, தான் வசிக்கும் / சொந்த பூர்வீக ஊர் வட்டாரங்களில் காலம் காலமாகப் பேசப்படும் பேச்சுவழக்குச் சொற்களை நேசிப்பவர்களுக்கு இதன் அத்தியாவசியம் புரியும்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு நான் ஒரு வார்த்தை சொல்கிறேன். 'வெஞ்சனம்' - நிச்சயமாக வட தமிழகவாசிகளைத்தவிர்த்து தென் தமிழகவாசிகள் குறிப்பாக இராமநாதபுரம் தொடங்கி குமரி வரையிலான பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் இலங்கைத்தமிழர்களுக்கும் நன்கு தெரிந்த அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சொல்லாகும். நான் சென்னையில் இந்தச் சொல்லை பயன்படுத்த நேர்கையில் சிலர் சிரிப்பர், சிலர் ஆச்சர்யப்படுவர், அவர்கள் பெரும்பாலும் இதன் பொருள் அறிந்திலார். சோற்றுக்குத் தொட்டுக்கொள்வதற்காக செய்யப்படுகின்ற காய்க்கூட்டு மற்றும் அதைப்போன்ற இன்னபிற உணவு வகைகளையே வெஞ்சனம் என்பர். இது ஊர்வழக்குச்சொல். இதனைப்போன்ற ஊருக்கே உரித்தான சொற்களைப்பயன்படுத்தி ஊர் பேச்சு வழக்குப்படி பேசுவதிலும் இருக்கின்றது பேச்சுவழக்கு மொழிப்பற்று.
எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.
கொரங்கித்தொகுப்பிலிருந்து கூலிக்காரன், பட்டறை, சுமை, தூரத்தில் தொலைத்த தருணங்கள், சாக்குச்சட்டை ஆகியன நான் மிகவும் ரசித்த / என்னைப்பாதித்த சிறுகதைகள் என்பேன்.
செ. அங்குராஜ்
12.08.2018

No comments:
Post a Comment