சில தினங்களுக்கு முன்பாக மாநகர் பேருந்துகளில் ஆடவர்~ மகளிருக்கான ஒதுக்கப்பட்ட இருக்கைகளும், அதில் நடக்கும் சில நிகழ்வுகளையும் பட்டியலிட்டு ஓர் ஆதங்கப்பதிவு இட்டிருந்தேன். அதற்கான மறுமலர்ச்சியாக ஓர் நிகழ்வு அதே எண்ணிட்ட பேருந்தில் நடந்தேறியது, நேற்றைக்கு மாலையில். இதோ அவையாவும் உங்களின் கண்ணோட்டத்தின் முன்னால்....
***
45A பேருந்து. நேற்றைக்கு மாலையில், வழக்கம்போல் அலுவல்பணி முடித்துவிட்டு இராயப்பேட்டையில் பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஆங்கு முழுதுமே தலைகளாக நிரம்பி வழிந்தப்போதிலும், கடைசி வரிசை மகளிருக்கான இருக்கைகள் யாவுமே காற்று வாங்கியப்படி ஏங்குவது போலிருந்த ஒரே காரணத்தாலோ என்னவோ அங்குப்போய் சன்னலின் ஓரமாய் ஒரு இளைஞன் அமருகையில், அவனருகே பழுத்த ஒரு முதியவரும் அமர்ந்துக்கொண்டார்.
பேருந்து சில நிறுத்தங்களைக் கடக்கக் கடக்க, மொதுமொதுவென மக்கள் கூட்டத்தால் நிரம்பியது, அப்பேருந்து. எங்கே நம்மள இருக்கைய விட்டு எழுந்திருக்க சொல்லிடுவாங்களோ என்னவோ என்று எண்ணினானோ என்னவோ என நினைக்கும் வகையில், அந்த இளைஞனும் படக்கென்று இரு கண்களையும் மூடி, தோள்ப்பையை மடியில் வைத்து அதைக்கட்டிக் கொண்டும் சாய்ந்து படுத்துக்கொண்டான்.
ஆக எவரும் அவனிடம் சென்று கேட்கப்போவதுமில்லை. அதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், அருகில் முதியவர் இருந்ததனால் அவரையும் யாரும் எழுந்திருக்கக் கேட்கப்போவதில்லை. அவ்வளவு இஸட் பாதுகாப்புப் போடப்பட்ட இடம் போல் நினைத்துக்கொண்டான், அந்த இளைஞன்.
சிறிது நேரத்தில் பேருந்தும் சைதாப்பேட்டையை அடைந்தது. சிகப்பு நிறத்தில் சிகைச்சாயம் தலையில் பூசியது போன்று செம்பட்டைத் தலைமுடியுடன், மூக்குக்கண்ணாடியும் சிடிதாரும் அணிந்த ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், பேருந்தின் கடைசி இருக்கை வரிசையை நோக்கி நடந்தார். அங்கு சென்று அந்த இளைஞனின் கையை அப்பெண்மணி சுரண்ட, எதையோ மனதில் முடிவு செய்தபடி இருக்கையில் இருக்கையிலே அவன் குனிந்திருந்த தலை நிமிர்ந்து நோக்க.
செம்பட்டைத் தலைப்பெண்மணி : "இது லேடீஸ் சீட்டு. நான் உட்காரணும், எழுந்திருங்க"
அவன் : "எனக்கு மயக்கம் வந்தப்படி இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்கங்க. கொஞ்ச நேரம் கழிச்சு எந்திரிச்சுடுவேன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டான்.
செ. பெண் : "கண்டக்டர் சார், அவரை எழுந்திருக்க சொல்லுங்க. நான் சொல்லியும் எழமாட்டிறாரு" என இரண்டு முறை பேருந்து நடத்துநரிடம் முறையிட்டார், அப்பெண்மணி.
(அவன் நடத்துநரைப் பார்த்து, செய்கையில் இதோ எழுந்துவிடுவதுபோல் பதிலளித்தான். இதன் பின்னர் என்ன நடந்திருக்கும்? எதாச்சும் கற்பனை செய்ய முடிகிறதா?)
நடத்துநர் : "ஏம்மா, முன்னாடி இருக்குற ஜென்ஸ் சீட்டுங்கள்ல பாருங்க. பத்துப் பொண்ணுங்க உக்காந்துருக்காங்க. பக்கத்துலயே பாருங்க. எவ்ளோ ஆம்பளைங்க எதுவுமே சொல்லாம நிக்குறாங்கனு. இப்ப வந்து ஏறிட்டு சீட்டு வேணும் அப்டினா, முன்னாடியே வந்து உக்காந்துருக்குறவங்களாம் எப்டிமா தெரியிறாங்க? எல்லாத்துலயும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண கத்துக்கோங்கம்மா" னு சும்மா நச்சென்று சொல்லி திரும்பி சென்றார்.
செ.த.பெண்மணிக்கோ, என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கையில், ஆடவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பொண்ணு எழுந்து, அப்பெண்மணிக்கு அமர இடம் கொடுத்து நின்றார்.
இதைக் கவனித்த அந்த இளைஞன் எழுந்து நிற்கின்ற அப்பொண்ணுக்கு இடம் கொடுக்க விளைந்தார். அதை நோட்டமிட்ட அந்தச் சின்னப் பொண்ணு "உக்காருங்க சார்"னு சொல்றாங்க.
அவன் : "இல்ல, பரவால்லங்க. நீங்க உக்காருங்க"னு எழுந்து இடம் கொடுத்துட்டான்.
மகளிர்குழு 5 பேர் : "தம்பி, நீங்க உக்காருங்க, பரவாயில்ல"னு சொல்றப்பயும், அந்த இளைஞன் கேட்கல.
சின்னப்பொண்ணு : "போங்க, நான் உக்காரப்போறது இல்ல"
அவன் : "ஏன்?"
சி.பொண்ணு : "பின்ன என்னங்க?! இப்பத்தான் கண்டக்டர் சார் சொல்லிட்டுப்போறாரு. நீங்க உக்காந்தா என்ன தப்பு? அந்தம்மா புடிவாதமா உங்களத்தான் எந்திரிக்க வைக்கமுயற்ச்சித்தாலும், நீங்க மறுபடியும் எங்களுக்கே உக்கார சீட்டு கொடுக்குறீங்க. சாரிங்க சார்.. ஒருசில பொம்பளங்கனால, எல்லாப்பொண்ணுங்களுக்கும் கெட்டப்பேரு தெரியுமா? நீங்க உக்காருங்க, "
மகளிர்குழு (5 பேர்) : "சரியா சொன்னம்மா."
இதையெல்லாத்தையும் அந்த 'கறார்' செ.த.பெண்மணிக்கு 'பளார்' என்றிருந்ததுபோலும்.! தன் தவறை உணர்ந்தார் போலும்.! சிறுது நேரத்தில், எழுந்து இடதுப்புறமிருந்த காலியான மகளிருக்கான இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.
அடுத்த விசில் சத்தத்தில், எனது பேருந்து நிறுத்தத்தை நான் அடைந்தவுடன் இறங்க முற்படும் முன்னர், அந்த சின்னப்பொண்ணைப் பார்த்தேன். புன்முறுவலுடன் எனைப்பார்த்தபடி. பின்னர், செ.த.பெண்மணியும் என்னைக்கண்டு புன்னகைத்தார். இறுதியில் நம்ம 'பஞ்ச்' நடத்துநரிடம் ஒரு பெரிய சல்யூட் அடித்துவிட்டு, பேருந்தை விட்டு இறங்கினேன்.
என்னங்க அவுங்களாம் எதுக்கு என்னப்பாத்து புன்னகை செஞ்சாங்கனு பாக்குறீங்களா? வேற ஒண்ணுமில்லங்க. அந்த இளைஞன் வேற யாரும் இல்ல, சாட்சாத் இந்த 'அங்குராசன்' தான்..
நல்ல ஒருமனநிறைவு எல்லார்ட்டயும் இருந்துச்சுனு மட்டும் என்னால அடிச்சு சொல்லமுடியும்..
மங்கையற்க்கரசிங்க அட்டூழியங்கள் எல்லாம் கூடிக்கிட்டேப்போகுதுனு சொல்லியிருந்தேன், கடந்தப்பதிவுல.. அதை திருப்பி எடுத்துக்கொள்கிறேன். ஏன்னா, சொக்கத்தங்கமான மங்கையற்க்கரசிங்க நிறையப்பேர இன்னிக்கு பார்த்துட்டேன்... மனமுழுதுமகிழ்ச்சி!!!!
***
"பேருந்தில் அமர்வதற்கென என்ன இருக்கைக் கிடைச்சாலும் உட்காந்துக்கலாமுங்க.. அதே வேளையில் வருகின்ற பேர்களில், நம்மளவிட அவுங்களுக்கு இருக்கை தேவைப்படுது அப்டினா, மறுக்காமல் தாமாக முன்வந்து, உக்காருவதற்கு இருக்கையைக் கொடுக்க முற்படலாமுங்க.. மனிதம் வளரட்டும்!"
~ செ. அங்கு இராசன்.
04/06/2016, சனிக்கிழமை.

No comments:
Post a Comment