ஜெயராம் - வாருங்கள் நண்பர்களே வாழ்த்தலாம்.

வாருங்கள் நண்பர்களே வாழ்த்தலாம்.

ஜெயராம்.. :)

பரபரப்புமிக்க இவ்வையகத்தின் வானுலகில் வளிமண்டலத்தினூடே காற்றைக் கிழித்து பறந்து உலா வருகின்ற பற்பல பறவைகளுக்கு மத்தியில் வானொலி அலைக்கற்றைகளின் சமிக்ஞைகளாகப் பயணித்து நம் இருசெவிகளின் வழியாய் நல்லபடியானக் கருத்துக்களைச் சுமந்துவந்து உள்ளிறங்கி இதயத்தில் வேரூன்றும்படி சொல்லி மனதிற்க்கு பேரானந்தத்தை ஏற்படுத்தும் மென்மையான அதே நேரத்தில் கனத்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

மக்கள் மதிக்கின்ற வகையில் எனக்குத்தெரிந்த நன்கறிந்த  எளிமையானவர்களில் அண்ணனுக்கு முக்கிய இடமுண்டு. தன் இனிய வசீகரக்குரலினால் பல லட்சக்கணக்கான ரசிகர்களைத் தனக்கென உருவாக்கி, அவர்களது இதயங்களில் அன்பால் அசைக்கமுடியா சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளவர்.

அதற்க்கு சான்றாக, 9 ஆண்டுகளாய் தொடர்ந்து வெற்றிகரமாய் ஒலிபரப்பப்படும் இவரது வானொலி நிகழ்ச்சியான 'ஆத்திச்சூடி'... ஹலோ பண்பலையின் முதல் குரல் என்பது கூடுதல் சிறப்பு.

9 ஆண்டுகளாய் ஒரு நிகழ்ச்சி, அதிலும் அதே ஆள், இன்னும் வெற்றியோடு என்றால்.. சாதாரணமாக நிகழ்ந்துவிடுமா என்ன இத்தகைய சாதனைகள் எல்லாம்...
தான்செயும் பணியினை செவ்வெனவே அரும்பணியாய் தலைமேற்கொண்டு அதிலே இப்படி செய்தாலென்ன அப்படி செய்தாலென்ன என்றெண்ணி நாளும் புதுமைகளைத் திறம்படத் திணித்து தன் ரசிக நேயர்களுக்கு நிகழ்ச்சியாகத் தருவதனால், இது சாத்தியமாயிற்று.

பல சாதனையாளர்களின் பாதையைப்போன்றே இவர் கடந்துவந்தப் பாதைகளும் தன்னகத்தே சற்று நிறையவே சவால்களையும் சோதனைகளையும் போட்டிகளையும் கொண்டது. அவையனைத்தையும் இன்முகமுடன் அரவணைத்து செயலில் வெற்றிகாட்டி இன்றுவரையில் வாகைசூடியாகவும் முடிசூடா மன்னனாகவும் இத்துறையில் வலம்வருகிறார் என்றால் அது மிகையாகாது.

படிப்பென்று வருகையில் முதுகலையில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவராவார். ஒருமுறை சென்னைக்கு இந்திய ஆட்சிப்பணித் தேர்வெழுத வந்திருக்கையில், ஊடகங்களில் தன் திறமையைக் காண்பிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்போது அவரே அறிந்திருக்கமாட்டார் இன்றைய உயர்ந்த நிலையை அவர் அடைவாறென்று.

ஆம், அகில இந்திய வானொலியில் செய்திவாசிக்கும் பிரிவு பின்னர், தூர்தர்சன் தொலைக்காட்சியிலும் முன்னணி செய்தி வாசிப்பாளரான திருமதி. சோபனா ரவி உட்பட பலரோடு இணைந்து சுமார் 2 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராய்ப் பணியாற்றியிருக்கிறார்.

எதைச் செய்தாலும் அதைத் தெளிவுப்படச் செய்ய விரும்புவார். ஆதலால் தானோ என்னவோ, இவரது ஒவ்வொரு முயற்ச்சிக்கும் பரிசாய், நம் தமிழ்த்தாய் தன் அகமகிழ்ந்து வாகை மலரை அவருக்குச் சூடிச்சூடி அழகுப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் போலும்!

நல்லது நடக்கும்! நல்லது மட்டுமே நடக்கும்! எனும் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை நாளும் நமக்குச் சொல்லி மனதைரியத்தை ஏற்படுத்த முற்படுபவர். இவர் செய்யுள் சொல்லி அதற்க்கு பொருள் கூறும் நயம் இருக்கிறதே, அடஅட.யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பேசலாம் எழுதலாம். ஆனால் சொல்பவர் சொன்னால் அதையும் சொல்லும் விதம் பார்த்துச் சொன்னால் கிடைக்கும் பயனோ கோடி. ஆக, இலக்கியக் காதலனை இலக்கியக் கிறுக்கனாய் மாற்றும் வல்லமை இவரது குரலுக்கும் அதை சொல்லும் தொனிக்கும் உண்டு.

அண்ணனுக்கு இசையிலும் நாட்டம் அதிகம். வீணை வாசிப்பில் கைத்தேர்ந்தவராய் வலம்வர நாட்களும் வெகுதூரம் இல்லை.

ஒன்று நினைவிற்க்கு வருகின்றது. அண்ணன் சொல்லியிருந்தார். ஒரு ரசிக சகோதரி இவரது நிகழ்ச்சியில் இவரளிக்கும் இத்தகைய விளக்கங்களை எல்லாம் குறித்து வைத்து இருந்து, அதனை ஒரு புத்தகம்போலாக்கி, பரிசளித்தாராம் அண்ணனுக்கு. தன்னகத்தே பொருள்பலப் பொதிந்து மாணிக்கமான வாசகங்களைக் கொண்டிருக்கும் திருவாசகமும் அதற்க்கு அவர்தந்த தெளிவுரையும் அது. இன்னும் நிறைய இதுபோல பல இனிக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம். எழுதினால் பல இணைப்புகள் கொண்ட இரயில்பெட்டிகளைப்போல் நீண்டுப்போகும். அவ்வளவு உண்டு.

அண்ணா, இதுபோல நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணக்கம் சொல்கிறேன். தங்கள் வீட்டிற்க்கு நான் வந்திருந்தபோது அப்பா, அம்மா, அண்ணி, தம்பி கிருஷ்ணா ஆகியோர் எனக்கு செய்த அன்பினை நான் எந்நாளும் மறக்கமுடியாது.

தங்கள் வீட்டிற்க்கு கிருஷ்ணாவிற்க்கு அடுத்ததாக வந்திருக்ககூடிய குட்டிப்பாப்பா 'இராஜமாதங்கி'யைக் காண பெரும் ஆவல் பூண்டுள்ளேன். விரைவில் வந்து சந்திப்பேன் என நம்புகிறேன்.

வருடந்தோறும் இதுபோன்று வாழ்த்துச்செய்திகளை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என்று உளமாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு, இன்னொருமுறை தங்களுக்கு வாழ்த்துச் சொல்லிக்கொள்கிறேன்.

என் ஜெயராம் அண்ணனுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள். :D

உற்றத் தோழனாய், உங்கள் அரும் தம்பியாய்,
செ. அங்கு இராசன் :)
12.06.௨016

No comments: