என் அடித்தளமனத்தின் எண்ணங்களின் ஓட்டமே இந்தப்பதிவு. இது நெடியப் பதிவுதான். இருந்தாலும் எழுத விரும்புகிறேன்.
அது எனது பள்ளிப்பருவம். முழுமன நிறைவுடன் நான் பயணித்தப் பொற்காலம் என்றே சொல்லவேண்டும். எல்லா ஆசிரியர்களுக்கும் நான்தான் செல்லப்பிள்ளை. இன்னும் சொல்லப்போனால் பள்ளியில் தொடங்கி கல்லூரி வரையிலும் பயின்ற நான்கு கல்வி நிலையங்களிலும் நான்தான் வகுப்பில் 'லீடர்'. அந்தளவுக்கு நம்ம மூஞ்சிக்கு பின்னால பெரியதா ஒளிவட்டம் சுத்துறது தெரிஞ்சுருக்கும் போலிருக்கு.
Sheeba Joseph Rajan Babu பென்னி மிஸ், ஜோசப் ஐயா, ராணி டீச்சர், வேதமணி டீச்சர், வசந்தா டீச்சர், ஹெலன் டீச்சர், ஜெயக்குமாரி அம்மா, பேராயர் ஜெயக்குமார் ஐயா இவர்கள்தான் எனது எழுத்தறிவு, மொழியறிவுக்கு அடித்தளமிட்டவர்கள். இன்றுவரையிலும் அன்பால் என்னை கண்கலங்கவைத்தவர்கள்.
தமிழாசிரியர்கள் அபிராமி மிஸ், பேபிராணி டீச்சர், மணிமேகலை அம்மா, பாலு ஐயா, நல்லாசிரியர் மாயழகு ஐயா, Karthikeyan இவர்களின் பெரும்பணி வெறும் வார்த்தைகளில் அடங்காது. அப்போதெல்லாம் நாள்தோறும் என்னை மேடையில் தமிழில் செய்திகள் வாசிக்கச் செய்வது, திருக்குறள் சொல்லி சிந்தனைப்பொருள் சொல்லுவது, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடிவினா, பாட்டு ஒப்புவித்தல் போட்டி, மாணாக்கர் இலக்கிய மன்றம், கம்பன் கழகம், அறிவியல் கழகம் என முழுதாய் என்னை அவற்றுள் ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தினார்கள்.
மேல்நிலைப்பள்ளி மாற்றலுக்குப்பின் தமிழாசிரியை நளினி மிஸ் அவர்கள் பாடம் எடுக்கும் விதம், செய்யுள் பொருள் விளக்கும் பாங்கு சற்றே வித்தியாசமானதாய் இருந்தது. பாடத்திட்டத்தை தவிர்த்து பற்பல தமிழ் இலக்கிய, உரைநடை, சிறுகதை, அறிவியல் சார்ந்தவற்றில் எங்களை ஆய்வுப்பணி மேற்கொள்ளச் செய்து அதுபற்றி விளக்கக்கட்டுரையும் எழுதிவரச் சொல்லுவார். அவையனைத்துமே நெஞ்சால் மறக்க இயலாத பசுமையான காட்சிகள் பலவற்றை கொண்டது.
சமீபத்தில் எனது பள்ளி தோழர் தோழிகளிடம் அலைப்பேசியில் பலவருடங்கள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது பழைய நினைவுகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார்கள். தோழி ஒருவர் பள்ளிக்கு சென்று தமிழாசிரியரை பார்த்து நலம் விசாரித்திருந்த வேளையில், என்னைப்பற்றி பத்து அண்டுகள் கழித்தும் ஆசிரியர் நினைவு வைத்து வினவியிருக்கிறார்கள். இதனை கேட்கும்பொழுது நன்றியுணர்வால் என் ரோமங்கள் மெய்சிலிர்க்கலானேன்.
இனிவரும்காலங்களில் என் ஆசிரியப் பெருமக்க ளனைவரையும் எனது பயணத்தில் மீண்டும் ஏதோஒரு வகையில் ஒன்றுசேர்த்து அவர்களின் வழிகாட்டுதற்படி நடந்திட விழைகிறேன். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.
எனது குடும்ப பின்புலம் சற்று ஏழ்மையானது. பல போராட்டங்களுக்கு பின்னர், கல்லூரியில் மின்னியல் பொறியியல் துறையில் சேர்ந்துப்படித்தேன். படிப்பிலும் கெட்டி எனும் சொல்லும் அளவிற்கு அண்ணா பல்கலைக்கழக அளவில் நான்காவது தரம், தங்கப் பதக்கம், பண ரொக்கம், பாராட்டும் கிடைத்தது. சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளாய் தனியார் துறையில் பொறியாளராய் வேலை. வாங்கும் சம்பளமும் தம்பிகள் மேற்படிப்பு, சொந்தக் கடன், நண்பர்களிடம் கடன் வாங்குவதும் அடைப்பதும் என இவற்றிற்கே ஆகச் சரியாயிருக்கும். சொந்தமாக வீடு, மனை கட்ட வாங்க கனவுகளும் உண்டு. கனவுகள் ஆடம்பர நோக்கோடு அல்ல, அவசியத் தேவைக்காக மட்டும் தான். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.
நானும் அவ்வப்போது இந்த ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் நினைப்பதுண்டு. தொடர்ந்து பல தமிழ் நூல்கள் படிக்க வேண்டும். தொடர்ந்து கதைகளில் பற்பல கதாப்பாத்திரங்களோடு பயணிக்கவேண்டும். தொடர்ந்து கவிதைகள் படித்து ரசிக்கவேண்டும். தொடர்ந்து தமிழின் இனிமையை உணர்ந்தே என்காலம் நகரவேண்டும். என்னசெய்வது! பல சூழலின் காரணத்தினால் எந்திர உலகத்தின் பிடியில் கட்டுற்றதுபோல காற்றுவீசும் போக்கில் போகும் படகாய், தமிழை தாய்மொழியாக கொண்டும் தமிழ்பேச கூசும் மக்களிடையே பயணிக்க ஆளாயினேன். நினைத்துப் பார்க்கையிலே பெருமூச்சொன்று வந்துவென் வலியினை நொடிப்பொழுது இறக்கிவிட்டு செல்லும். அவ்வப்போது மேற்கொள்ளும் நெடும் ரயில்பயணங்களில் கிடைக்கின்ற நாவல்களோடு பயணிக்கும் பேறும் கிடைக்கும். அதனுடைய தாக்கம் சிலநாட்கள் அலுவலகம் வரையிலும் இருக்கும். இப்படி நேற்றைக்குப் பெய்தமழைக்கு வளரும் காளான் என்றல்லாமல், விழுதுபல விட்டு அதையே வேராக்கி இன்னொரு மரமாகும் பெரும் ஆலமரம் போன்று, நல்ல நூல்கள்பலவகை ஒன்றுமுடிய மற்றுஒன்றாய் தொடர்ந்து படித்திடும் வாசகனாகும் கனவு பலித்தலும் வேண்டும். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.
நாள்தோறும் நாம் சந்திக்கின்ற மனிதர்கள் ஏதேனும் ஒருவகையில் நம்மைச் சிந்திக்க செய்வதுண்டு. சந்திக்கின்ற மனிதர்களில் மனதால் நல்லவர்களும் இருக்கலாம் கெட்டவர்களும் இருக்கலாம். அவர்களை நம்மால் கண்டதும் மதிப்பீடு செய்வது என்பது கடினம்தான். பழகிப்பார்த்தால் தான்தெரியும். அவரின் பண்பென்ன பாடென்ன என்றும்புரியும். இதோடு நமது இயல்புகளும் ஒத்துநிற்க சேர்ந்தே மலர்வதுதான் தூயநட்பு. அப்படிதான் என்னைப்பொறுத்த வரையில் Anburaja, Loveson, Guna, Sutha, Vengatesh, Rethina, Mahathir, அஜீஸாக்கா, Aysha, Karthik, Thowfiq, Noor, Praveen, Faisu, Velan, Bala, Nantha, Jameer, Arul, Shibani, Inigo, Suresh, Selvinanna, கிருஷ்ணா, Dhana, Raj, Krishnakumar, Harish, Ramshankar, பிரியா, கவிமணி, தாசன், Kesavaraj, கார்த்திக் புகழேந்தி, கவி இளவல், Vadivarasu, Rameshanna இன்னும் நிறையப் பேர் தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒருவகையில் என்மனத்தில் நீக்கமற நிறைஞ்சுருக்காங்க. எத்தனை கருத்து வேறுபாடு வரினும் ஒருநல்ல புரிதல் ஒன்றுமட்டுமே கொண்ட நட்பினை வழிநடத்தும். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.
என் வாழ்க்கையில் இப்பதிவில் வரும் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ நல்ல பலமாற்றங்களை என்னில் உண்டாக்கியவர்களே!
பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.
அன்புடன்
செ.அங்குராசன் :)
17.06.௨016

No comments:
Post a Comment