இது நடந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. என் நண்பர்களிடமும் நடந்ததை சொல்லி புளம்பியிருக்கிறேன். ஆனால் இன்னும் என்னால் அதைவிட்டு மீண்டு வர இயலவில்லை. அந்தக் காட்சி கண்முன்னே வந்தபடியே இருக்கின்றது. சரி எழுதியாவது அந்த அழுத்ததிலிருந்து வெளிவரலாம் என்றெண்ணி இதை எழுதுகிறேன்.
சரியாக அலுவலகம் முடிந்து நண்பரோடு அவரது இருசக்கர வண்டியில் வீடு திரும்புகையில் காத்திருக்கிறது அந்தக் காட்சி.
துரைப்பாக்கம் சிக்னலையும் காமாட்சி மருத்துவமனை சிக்னலையும் இணைக்கும் தார்ச்சாலையில் எங்களது வண்டி சென்று கொண்டிருக்கிறது. (பள்ளிக்கரணை சதுப்பு நீர்நிலைகளின் குறுக்கே ஆக்கிரமித்து போடப்பட்ட சாலை தான் அது. பழைய மகாபலிபுரம் பகுதியிலிருந்து வேளச்சேரி பகுதிக்கு செல்பவர்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும் வாகன நெரிசலிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பெரும்பாலும் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றனர்.)
அந்த ஒட்டுமொத்த சாலையின் நீளத்தின் நடுவே இடதுபுறமாக வண்டி செல்கையில் வலது எதிர்புறத்தின் சாலையோரத்தில் நால்வர் சூழ நின்றிருந்தனர். ஏதோ சம்பவம் நடந்திருக்கிறது என்று எனக்குள் ஓருணர்வு. வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு சாலையின் எதிர்புறத்திற்கு கடந்து சென்றோம். மனது படபடத்துக் கொண்டே இருக்கிறது. உள்ளே கடவுளை வேண்டிக்கொண்டு வாய் முனுமுனுத்தப்படி மனத்தை தைரியப்படுத்தி கால்களை முன்னே நகர்த்தி என்னுடலை தள்ளினேன்.
நான் நிற்கும் சாலையின் விளிம்பிலிருந்து 10 அடி தூரத்தில் வளர்ந்த பெரிய புற்செடிகளின் பள்ளத்தில் ஒரு ஸ்போர்ட்டிவ் மோட்டார் இருசக்கர வண்டி குப்பைக் கழிவுகளின் மத்தியில் இயல்புதவறி கவிழ்ந்து கிடந்திருந்தது. எனதருகே நின்றவரிடம் "வண்டி இங்கிருக்கே ஓட்டுனவரு எங்க?" என்று வினவியதும் அவர் தந்த பதில் "அங்க கெடக்கு".
எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
எவரும் அருகே செல்ல அச்சம் கொண்டு நிற்கின்றனர். நான் இதுவரை கடந்துவந்த நிமிடங்களிலேயே கூட்டமும் கூடத் தொடங்கியது போன்ற உணர்வு. நான் எதையும் கவனிக்காமல் முன்னே நகர்ந்தேன். உடனே பின்னாலிருந்து எனக்கு முன்னே இருவர் அந்த இடத்தை நோக்கி ஓடினர்.
நானும் அவ்விடத்தை அடைந்தேன். 21 வயது மதிக்கத்தக்க ஒரு இளவயது வாலிபன் நிலைகுழைந்து பேச்சு மூச்சின்றி விழுந்து கிடந்தான். எங்கள் சத்தம் கேட்டதும் அவன் கைகள் அசைகின்றன. உயிர் இருக்கிறது. அவனது இடது வாய்க்கடைவாய் பற்கள் ரத்தக்கறையுடன் உடைந்துப் போயிருந்தது. இடது வலது கைகள் குத்தி கிழித்திருந்தன. வலது காலோ நான்கு துண்டுகளாக எலும்புகள் உடைந்து கிடக்கின்றது.
அங்கு இவ்வாறு உரையாடல்கள் நடந்தன. ஆனால் அவனிடம் பதில் எதுவுமில்லை. அசைவும் இல்லை.
"தம்பி இங்க பாருப்பா. காது கேக்குதா. "
"தண்ணியிருந்தா கொடுங்க"
"ஆம்புலன்சுக்கு கால் பண்ணுங்க"
"தம்பி உன் மொபைல் பாஸ்வேர்டு சொல்லு"
"கடைசியா யார்ட்ட பேசுனாருனு பாத்து அவுங்ககிட்ட தகவல சொல்லலாம்" இதுபோன்று.
நானும் அங்கு நின்றிருந்த இன்னொருவரும் தனித்தனியே 108 க்கு தொடர்பு கொண்டோம். நான் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்குப்பிறகு தான் தொடர்பு கிடைத்தது. தகவல் தெரிவிக்கப்பட்டது. வண்டி வந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்த இடத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். 4, 5 பேர் நன்கு உதவினர். என்னால் தொடர்ந்து நிற்க இயலவில்லை. மயக்கம் வந்துவிட்டது. நான் என் நண்பரை அழைத்துக் கொண்டு கிளம்புகிறேன், ஆம்புலன்ஸ் வண்டியும் வந்துவிட்டது.
அதன்பின்னர் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது. கண்டிப்பாக அவன் நான்கைந்து மாதங்கள் படுக்கையில் தான் இருக்க வேண்டிவரும்.
இதிலிருந்து சிலவற்றை அடிக்கோடிட்டு கூற நினைக்கின்றேன்.
1. எவ்வளவு வேகமாக ஓட்டி வந்து எதோடோ மோதியிருந்தால் வண்டியும் அவனும் தூக்கி வீசப்பட்டிருப்பர்? ஸ்போர்ட்டிவ் பைக் வேறு. வேகத்திற்கு சொல்லவா வேண்டும்!?
2. தலைக்கவசம் அணிந்திருந்திருந்ததால் தலையில் பெரிய அடி இல்லை. ஒருவேளை அணியாதிருந்தால்?!
3. எந்த சூழலில் அவன் வேகமாய் சென்றானோ? அவனுக்கென்ன அவசரமோ ? அவனை சார்ந்தவர்களுக்கு ஏதேனும் துயரமோ என்னமோ? வேகத்திற்கும் நியாயம் தேடுவது உசிதமாகுமா!?
4. பயன்படுத்தும் கைப்பேசியின் கடவுச்சொல் . ஆபத்துக்காலத்தில் எப்படி நம்மை சார்ந்தவர்களுக்கு தகவல் கொடுப்பது என்று சிந்தித்திருந்தால்..!?
5. கைப்பேசியின் திரையில் emergency contact என்று நம் வேண்டியவர்களின் தொடர்பு எண்களை போட்டு வைத்திருந்தால்...
6. ஆம்புலன்ஸ் தொடர்பு நேரம் கடந்து தாமதமாக கிடைக்கிறது. சரி ஒருவேளை உயிருக்குப் போராடுபவரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தால் ?
7. இந்த சம்பவம் ஒருவேளை நடுசாமத்தில் நடந்திருந்தால்?!
8. இரவில் அந்த இருட்டுக்குள் எவர் முனங்கினாலும் கூக்குரலிட்டாலும் திருடனோ கள்ளனோ என்று எவரும் அருகேக்கூட செல்லமாட்டார்கள். இதுவும் ஒருவேளை அப்படி நடந்திருந்தால்..!?
9. வேகமாக வண்டியில் வரும்பொழுது ஒருக்கணம் குடும்பத்தை நினைத்துப் பார்த்திருந்தால்..!? சீற்றம் தேவைதானா என்று தோன்றியிருக்கும்.
எப்படியும் அவன் இன்று உயிரோடு தானிருப்பான். என்ன கை கால்கள் நுடமாகியிருப்பான். மீண்டு வர எலும்புகள் பழையபடி ஊறி சேர்ந்துவர நேரம் எடுக்கும். பிறகாவது சிந்திப்பானா நமக்கு ஏன் இந்த நிலை? யாரால் வந்தது என்று.?!
முடிந்தவரை கவனமுடன் சாலையில் நிதானத்தோடு செல்வோமே. வீட்டில் நமக்காக ஒரு குடும்பமே நம்பி காத்திருக்கின்றது, வெளியில் நம் நண்பர்களும் நேசத்தோடு காத்து இருக்கிறார்கள். கவனம் தேவை உறவுகளே. சற்று மன இறுக்கம் குறைந்தது போன்றதொரு உணர்வு.
அங்குராசு.
26-04-2017

No comments:
Post a Comment