என்னிடம் முன்பே படம் பார்த்த சில நண்பர்கள் "இதெல்லாம் ஒரு படமா? மொக்கை" என்று பொத்தாம் பொதுவாக சொன்னார்கள். நானும் படம் பார்த்தேன். என்னை பொறுத்த அளவில் இயக்குனர் கதைக்கேற்ப திறம்படவே நகர்த்தியிருக்கிறார் என்றே நான் சொல்வேன். நான் கண்டு ரசித்த படமாகத்தான் இருந்தது. அனைவரும் ரசித்தனர். முழுக்க முழுக்க நகைச்சுவைகளுடன் கூடிய சுவாரஸ்யங்கள் நிறைந்த கற்பனையான திகில் படம். படத்தின் ஓட்டத்திலேயே சில 'மெசேஜ்'களும் சொல்லாமல் சொல்லப்படுகின்றது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இரும்பொறையன் என்னும் பல்லவ மன்னன் வாழ்ந்து வந்ததாகவும் அவருக்கு மரகத நாணயம் என்றால் அவ்வளவு இஷ்டம் என்றும் அதனால் அவன் பெற்ற வெற்றிகளை பற்றியும் படத்தின் அறிமுகத்தில் சொல்கிறார்கள். அவரின் வயோதிக பிராயத்திலும் படுத்த படுக்கையிலும் மரகத நாணயத்தை கையைவிட்டு நீக்காது அவர் கையிலேயே வைத்திருப்பார். அதன்மீது கொண்ட தீராத காதலினால், தான் இறந்தபின்னும் தன்னுடைய கல்லறையில் அதனையும் சேர்த்தே புதைக்கச் செய்கிறார். அதற்கும் காவலும் இருக்கிறார். மீறி அதனைத் தொடுபவர்களை காவும் வாங்குகிறார், இறந்துபோன மன்னன் இரும்பொறையன். இப்படியாக பல நூறு ஆண்டுகள் கழித்து, இன்றைக்கு அதன் நிலை என்ன? அது யாரிடம் இருக்கின்றது? இரும்பொறை மன்னன் இன்னும் காவலுக்கு இருக்கிறாரா? என்று பல கேள்விகளுக்கு விடை கிடைக்கின்றன படத்தின் இறுதியில்.
மரகத நாணயம் வேண்டி அதனை அபகரிக்க நினைக்கும் 132 பேர் இரும்பொறை மன்னனால் கொல்லப்படுகின்றனர். இதற்காக விலை பேசி வெளிநாட்டிலிருந்தும் பலர் படையெடுக்கின்றனர். இந்த நிலையில் ஸ்மக்ளிங் செய்து சம்பாதித்துக் கொண்டிருந்த கதாநாயகனும் அவன் தோழனும் மரகத நாணயத்தைப் பற்றி அறிய வருகின்றனர். பணத்திற்காக கதாநாயகனும் அவன் தோழனும் இணைந்து ஆவிகளினால் எழுப்பப்பட்டவர்களைக் கொண்டு, மாண்டுபோன 132 பேர்களின் ஆவிகளை வைத்து மரகத நாணயத்தை ஒரு வழியாக எடுத்துவிடுகின்றனர். அவர்களையும் இரும்பொறை மன்னன் துரத்துகிறான். ஒரு கட்டத்தில் மன்னன் வெல்கிறான். இவர்களின் உயிர்களும் காப்பாற்றப்படுகின்றன.
படம் முழுக்கவே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. ஆவி ஏறிய பூதவுடல்கள் செய்கின்ற செயல்களனைத்துமே நம்மை வயிறு வலிக்க சிரிக்கச்செய்துவிடும் என்பதில் துளியும் ஐயமில்லை. கதாநாயகனின் தோழனாக வலம் வருபவரும் தன் நடிப்பில் அள்ளிக்கொண்டிருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் ஆன்ந்த்ராஜ் 'ட்விங்கிள் ராமநாதன்' என்ற பெயரில் வலம் வருகிறார். ஆவிகளினால் எழுப்பப்பட்டவர்கள் வழியாக படத்தின் இயக்குநர் பார்வையாளர்களிடம் சில கருத்துகளை முன் வைக்கிறார்.
எழுப்பப்பட்டவர்களின் வேலை முடிந்துவிட்டபடியால் கதாநாயகன் மற்றும் அவன் தோழனிடமிருந்து விடைபெறுகையில் ஆவிகள் பேசும் பேச்சுகள் என் நெஞ்சைத் தொட்டது... அவ்வகையில் ஒரு மூத்த வயதான தமிழ் பெரியவரின் ஆவி பேச்சு அமைந்தது. தன் மக்கள் வாழணும், தன் மொழி வாழணும், தன் நாடு செழிக்கணும்னு வாழ்க என்மக்கள், வாழ்க தமிழ்னு சொல்லியபடி, தான் புகுந்திருந்த செத்த உடலவிட்டு விலகி போவாரு பாருங்க. நம்ம கண்ணுக்கு அதே காலகட்டத்துல வாழ்ந்து போய் சேர்ந்த நம்ம முன்னோர்களும் அவுங்க நமக்காக செய்து முன்னமே வைத்த பல நல்லவைகளும், விட்டுச்சென்ற இயற்கை வளங்களும் நம் கண்முன் வந்துபோகும். நல்லா இருங்கடா, என் மக்கா, நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு இன்னொரு ஆவி சொல்லியபடி போய்சேர்ந்துவிடும்.
கதையின் உயிர்ப்பு கருதி காதல் மற்றும் கதாநாயகனின் காதலியை பற்றி இங்கு சொல்லவில்லை. பெண் ஒருவள் தன் காதலைக்கூட சொல்லமுடியாமல் வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள். கணவனுடைய கொடுமையினால் மாண்டும் போகின்றாள். அப்படி இறந்து போனவள் ஒருநாள் வேறொரு வடிவங்கொண்டு மீண்டு வருகிறாள். கணவன் அப்போதும் அவளை அடிக்கிறான். இங்கு இயக்குநர், பெண்ணியத்தின் மீதான தாக்குதலை உணர்த்த வேண்டி ஆணாதிக்கம் கொண்ட சமூகத்தினை அறைவது போன்று ஒரு காட்சியை அமைக்கிறார்.
காட்சிகளனைத்துமே நகைச்சுவை உணர்வையும் சேர்த்தே தரும்படி படமாக்கப்பட்டிருப்பது ஒன்றுதான் இந்த படத்தின் வெற்றியாக இருக்கமுடியும்.
படம் முடிந்து வெளியில் வருகையில் உங்களோடு சற்று தூரம் இரும்பொறை மன்னனும் கூடவே வருவான். வந்தான்.
20-06-2017
20-06-2017
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

No comments:
Post a Comment