அரையும் குறையுமாக வீடியோ ஒன்றை பார்த்துவிட்டு தெளிவில்லாமல் ஆராய்ந்து பார்க்காமல் ஒரு பெண்ணின் பேச்சை நடத்தையை கேளிப்பேச்சாகவோ நையாண்டியாகவோ பேசி சிரித்து பிதற்றுவது கீழினும் கீழான செயல் எனக் கொள்க. வார்த்தைகளை பிடித்துத் தொங்குபவர்கள் அதன் மூலத்தை அறிய முற்பட்டால் உண்மை விளங்கும்.
நான் உண்மையில் இதனை இங்கு கூற விரும்பவில்லை. இருந்தாலும் சில அறிவிலிகளால் ஏற்படுத்தப்படுகின்ற பிம்பமானது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதை சொல்லவே இதனை எழுதி வைக்கிறேன்.
Bigg Boss என்ற நிகழ்ச்சியின் பின்புலம் என்ன ஏது அதுவெல்லாம் வேறு கதை. சமீபத்தில் வெளியான நாள் 1க்கான காட்சிகளில் ஜுலி என்ற பெண்ணின் பேச்சை வைத்து பற்பல மீம்களும் வசைகளுமாய் வந்த வண்ணமாக இருக்கிறது. பொதுவில் ஏனோதானோ என்று வீடியோவை பார்த்தால் அப்படித்தான் தோன்றியிருக்கும். நன்கு கவனித்திருந்தால் அதன் உண்மைத்தன்மை விளங்கியிருக்கும்.
ஜுலி (எ) ஜூலியானா அனைவருக்கும் பரிச்சயப்பட்ட, சல்லிக்கட்டு மெரினா போராட்டத்தில் இளம்பெண்ணாக நின்று எந்தவொரு பயமுமின்றி தனக்கென உரித்தான பாணியில் தைரியமாக ஆளும் வர்க்கத்தின் பெயரைச்சொல்லி எதிர்க்குரல் கொடுத்து சமூக வலைதளத்தில் ஊடகங்களில் நம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். வீரத்தமிழச்சி என்று கூட சிலர் விமர்சனத்தோடு அழைத்தார்கள். அதன்பின் அவருக்கு பின்னால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களோ அது வேறு வேறு.
இவரை 5 மாதங்கள் கழித்து இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் "இவர் இயல்பான பேச்சே இப்படித்தானா? இல்லை, பேசிப்பேசி பயிற்சியின் விளைவாக தான் இப்படி பேசுகிறாரா என்பதை போக போக பார்க்கலாம்" என்று கமல்ஹாசன் 15 பேர்களில் ஒருவராக அறிமுகம் செய்கிறார்.
இரண்டு நாட்கள் நிகழ்ச்சியினை பார்க்கையில் நன்றாகவே ஒன்று விளங்குகின்றது. அதாவது ஜுலி, அனைத்து செயல்களிலும் தன்னை தன்முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டு வலிய வலிய பேச்சுகளை ஏற்படுத்தி (அல்லது சாதாரண இவரது பேச்சு அங்குள்ளவர்களுக்கு வித்தியாசமாக பட்டு , மற்றவர்களின் எதிர்பேச்சால் இவரது பேச்சு சற்று நீள்கிறது எனவும் கொள்ளலாம் என) தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். துடிப்புடனே இருக்கிறார்.
பல வேளைகளில் அவர் செய்வது 'over romanticising' போன்று தோன்றலாம். ஆனால் புதிய இடத்தில் புதிய ஆட்களோடு பழகுகையில் ஜுலி போன்ற துடிப்பானவர்கள் எதைச்செய்தாலும் கூடுதல் மெனக்கெடுக்கவே செய்வார்கள். அது அப்படித்தெரிவது யதார்த்தம்.
இது போல பல காட்சிகள் "அண்ணே சோறு சோறு.. அக்கா சோறு சோறு... சார் சோறு சோறு.... " , " சாப்பாடு வரப்போகுது.. கதவைத்திறந்து பார்த்ததும் பொருட்கள் இருப்பதைக்கண்டு தன் இரு கைகளையும் விரித்து "சாப்பாடு வந்துருச்சு" என கத்தும் பொழுதும் அதை பார்க்கும் சிலருக்கு கடுப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர் அவராகவே இருக்கிறார். அதுவே உண்மை.
ஷ்ரீ - ஆரம்பத்திலிருந்தே குழம்பிய குட்டைக்குள் இருக்கும் மனதை வைத்து சுற்றி புலம்பியப்படி இருக்கிறார். பிக் பாஸிடம் தான் வெளியே பேசவேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார். மறுவினையாக ஒன்றுமில்லை. சகாக்களான சக்திவேல் வாசு, கஞ்சா கருப்பு போன்றவர்களிடமும் புலம்புகிறான். மறுமொழியாக அவர்கள் அவனுக்கு ஆறுதல் கூறி, தைரியத்துடன் இருக்க அறிவுரை கூறுகின்றனர்.
அடுத்து ஜுலியிடமும் புலம்பியிருக்கிறார் நம் ஷ்ரீ. அதற்கு அவர் ஆறுதல் கூறிய வார்த்தைகளும் பேச்சும் தான் இன்றைக்கு 'வீரத்தமிழச்சியின் விரகதாபம்', 'கட்டிப்பிடிக்க ஆளில்லை சொல்கிறார் வீரத்தமிழச்சி' என ஊளை இணைய ஊடகங்கள் சிலவும் முகநூல் நண்பர்கள் பலரும் மேலோட்டமாய் பார்த்துவிட்டு சொற்களை பிடித்துருவி சுய இன்பம் கொள்கின்றனர்.
மீண்டும் அந்த காணொளியைப் பார்த்தால் உண்மை விளங்கும். ஜுலி கூறுவாள் " பாதியிலேயே விட்டுட்டு போக நினைக்காத. நான் வர்றப்போ வீட்டுக்குள்ள ஒருத்தரு ஒருத்தரு கட்டிப்பிடிச்சுட்டு இருந்தாங்க. எனக்குனு யாருமில்ல. என் நிலமையும் யோசித்து பாரு. பாதியில விட்டுட்டு போகணும்னு தயவு செஞ்சு நினைக்காத" னு.
அவ்வளவு தான் அவள் சொல்லியிருப்பாள். அதற்குள் ஈறும் பேனும் வைத்து ச்சை..
அவளது பேச்சு உண்மையில் எதனை ஒத்திருந்தது? எனக்கென்று தனியே பேச்சுத்துணைக்கு கூட யாருமில்லாமல் நானே இருக்கிறேன். எனக்கு accompany கொடுக்கவாவது நீ இருக்கலாம். அதைவிட்டு நிகழ்ச்சியின் பாதியிலேயே போகவேண்டுமென நினைப்பது முட்டாள்தனம் என ஒரு நண்பனுக்கு ஆறுதல் கூறும் தொனிதான் அவளுடையது.
ஒருவேளை அப்படியே அவள் ஒருவனை விரும்பி எதைக்கேட்டிருந்தாலும் அது அவளது உரிமை. அன்றைக்கு பலன் எதிர்பார்த்தோ இல்லாமலோ சல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தாள். அன்றைக்கு ஆகச்சிறந்தவள் இவளென தலையில் தூக்கிவைத்து ஆடுனீர்கள். அதே ஆட்கள், இன்றைக்கு தரையில்போட்டு தூற்றுகிறீர்கள். உங்களை போன்றதொரு கேவலமான பிறவிகளிடம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
விஜய் டிவிக்காரனும் டிஆர்பி ஏத்த இதைப்போட்டிருக்கிறான் என்று சொன்னாலும், நான் கண்ட காட்சிதானே அனைவரும் கண்டது, நான் கண்ட காட்சியில் அப்படியொன்றும் அசிங்கம் இருந்ததாய் தெரியவில்லை. தவறு அவர்களிடம் இல்லவே இல்லை. மேலோட்டமாக பார்க்கும் கண்களில் , ஆராய்ந்து பார்க்காது குற்றம் விளிக்கும் நாவில் இருக்கிறது.
இதுவெல்லாம் ஒரு விசயமென்று எழுதி வக்காலத்து வேறா என்று சிலர் எண்ணக்கூடும். பொய்யான ஒன்றை மெய்யாக்கி தூற்றுவதற்கென ஒருபுறம் கூட்டம் இருக்கையில், அது மெய்யல்ல பொய்யென்று கூறும் தனியனாக நான் இருந்துவிட்டுப்போகின்றேன்.
சாமிகளா, நான் பெண்ணியவாதி எல்லாம் ஒன்று கிடையாது. அதோடு அவரைச்சுற்றி நான் ஒரு புனிதபிம்பத்தை ஏற்படுத்தவும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணின் மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தப்படும் பொழுது மூடிக்கொண்டு செல்பவனும் நானல்ல என்பதைக்கூறிக் கொண்டு விடை பெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.
(Video Link : https://m.facebook.com/story.php?story_fbid=1814313598598108&id=1629018170460986
இது ஜுலியை விமர்சித்து போடப்பட்ட வீடியோ.)
#ஜூலி #BIGGBOSS
No comments:
Post a Comment