சவுக்கு சங்கரின் ஊழல்‍ - உளவு - அரசியல் : ஓர் வாசிப்பானுபவம்

சங்கர் அன்ணனை முதன்முதலில் சென்னை பியூர் சினிமா புக் பேலஸில் நடைப்பெற்ற அவருடனான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் சந்திக்கமுடிந்தது. தன்னைப்பற்றிய எளிய அறிமுகத்தோடு தொடங்கி தான் கடந்து வந்தப்பாதைகளிலிருந்து சிலவற்றைப்பகிர்ந்ததோடு நிகழ்கால அரசியல் பற்றியும் இன்னும் அங்கு கூடியிருந்த என்போன்ற வாசக ரசிகர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் வெளிப்படையாய் பேசியிருந்தார். சவுக்கு தளத்தில் என்னதான் தீவிரமாக படித்துவந்தாலும் நேரில் அண்ணனை கண்டுவிட்ட மகிழ்ச்சியான அதிர்ச்சியிலிருந்து மீள நேரமெடுத்தது. வந்திருந்த அனைவரும் அண்ணனின் புத்தகத்தை வாங்கி அவற்றில் அவரைக் கையெழுத்திடச்செய்து புகைப்படங்களும் அன்போடு எடுத்துக்கொண்டோம். 

சில நிமிடங்கள் சவுக்குத்தளம் மற்றும் முகநூல் உள்ளிட்ட என் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டபோது, அப்படியா என்று சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டார். அவரது தொலைப்பேசி எண்ணையும் பெற்றுக்கொண்டு விடைப்பெற்றேன். கிட்டத்தட்ட புத்தகத்தை வாங்கி ஒரு மாதம் கழித்துத்தான் படிக்க முடிந்தது. படித்தால் பக்கங்கள் தீர்ந்துவிடும் என்று அஞ்சியே படிக்காமல் இருந்தேன் என்பது வேறு. படித்து முடித்ததும் வார்த்தைகளும் உணர்வுகளும் பீறிட்டுக்கொண்டு முட்டிக்கொண்டு வந்தன. அண்ணனிடம் அலைப்பேசியில் அழைத்துப் பேசலாமா? வாட்சப் செயலியில் குறுஞ்செய்தி அனுப்பி பேசலாமா? என்று பலவாறு யோசித்தப்படியே இருந்தேன். சொல்லிவிட்டால் சொன்ன சொல்ப்போய்விடுமே. சொல்லவந்த எனது வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் உயிர் நிலைத்து இருக்கும் வகையில் சொல்லவந்ததை எழுதிவைத்துவிடலாமென என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். 



புத்தகத்தின் மீதான என் வாசிப்பானுபவம்:

சவுக்கு சங்கரின் 'ஊழல் - உளவு - அரசியல்'
அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்.
கதையை மிஞ்சும் நிஜம். கற்பனைக்கும் எட்டாத சாகசம். உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம்.
(அட்டைப்பக்கத்தில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்) 

ஒவ்வொரு வாசகனையும் அது எந்தளவுக்கு புரட்டிப்போடப்போகின்றது என்பதற்கான எச்சரிக்கைக்காகவே அவை எழுதப்பட்டிருக்கக்கூடும். 

வணிகம் சார்ந்து என்னத்தையாவது எழுதிவிடவேண்டும் என அல்லாமல் எந்தவொரு அலங்காரப் புனைவுகளுமின்றி முழுக்க முழுக்க அதன் இயல்பிலேயே ஒன்றி உயிரோடும் வார்த்தைகளைக் கோர்த்து உருவாக்கப்பட்டிருக்கின்றது இந்நூல். சாமானியன் ஒருவனாய் இருந்து ஊழலால் கரைப்படிந்திருக்கும் அரசு இயந்திரத்தை அசைத்துப் பார்க்க துணிந்தபோது தன்னை அடிபணியவைக்க எடுக்கப்பட்ட சித்திரவதைகளிலிருந்து சூழ்ச்சிகளிலிருந்து தப்பிக்க தானெடுத்த முயற்சிகளில் எவ்வாறு இறுதியில் வெற்றி அடைந்தார் என்பதைப்பற்றி பேசுகின்ற ஓர் உண்மைக்கதை. வஞ்சனையால் புதைக்கப்பட இருந்த அரும்பெரும் தன் வரலாற்றை தனியொருவனாகவே நின்று சுயமாக போராடி மீட்டுருவாக்கி வென்று காட்டிய‌ வகையில் இந்த படைப்பு நமக்கு கிடைத்திருக்கிற ஒரு அரிய பொக்கிசம்.

ஒரே இரவில் இந்நூலைப் படித்துமுடித்தேன். அந்தளவிற்கு எழுத்தாளர் இந்தப்புத்தகத்தில் தன் எழுத்துக்களால் வாசகனோடு உரையாடுகின்றார். பேசுகின்றார். உற்சாகமூட்டுகின்றார். சிரிக்கவைக்கின்றார். அழுகின்றார். அழவைக்கின்றார். எங்கெங்கோ அவர்கடந்த பாதைகளில் வாசகனின் கைப்பிடித்து கூட்டிச்செல்கின்றார். பயணிக்கவைக்கின்றார். கற்பிக்கின்றார். சிந்திக்க வைக்கின்றார். உறவாடுகின்றார். இப்படியாக வாசகனின் அசைவுகளைக் கட்டிப் போடுகின்றார். எந்த இடத்திலும் சலிப்பு தட்டவேயில்லை. அவரைப்போலவே சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அவரது எழுத்துகளும் நம்மைப்பயணிக்க வைக்கின்றன. 

சாதாரணக்குடும்பத்தில் பிறந்த சங்கர், தனது தந்தை அவரது அரசுப்பணிக்காலத்திலேயே திடீர் மறைவடைந்ததால் அதன்வழி கிடைத்த அரசுப்பணியில், தன் பள்ளிப்படிப்பை முடித்தக்கையோடு தனது பதினாறு வயதிலேயே சேர்கிறார். ஆழ்ந்த சிந்தனையும், தொடர்ந்த வாசிப்பும், அயராத உழைப்பும் கொண்டிருந்தமையால் நாளும் சிறப்படைந்து வருகின்றார். ஆரம்பத்தில் பெரியாரியம், அதைத்தொடர்ந்து இடதுசாரிய கொள்கைகளால் ஈர்க்கப்படுகின்றார். 

கலைஞர் கருணாநிதியின் அரசியல், ஆட்சி நிர்வாகம், மக்கள் நலப்பணிகள் பலசெய்திட்ட திமுகவின் பொற்காலம் தொடங்கி அலைக்கற்றை ஊழல் நடந்த திமுகவின் கெட்ட காலம் வரையிலும் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கி முதல்வரான பின் அவராடிய ஆட்டங்கள், ஊழல்கள், கீழான அரசியல் ஆட்சி நிர்வாகம் தொடங்கி திமுக காலத்தில் தம்மீதும் தம்மைச்சார்ந்தோர் மீதும் போடப்பட்ட பல்வேறு ஊழல் சார்ந்த வழக்குகளை மூட அவர் காட்டிய ஆர்வம், லஞ்ச ஒழிப்புத்துறையில் இல்லாத நடைமுறையில் ஊழல் பின்னணி கொண்ட தமக்கு வேண்டியவர்களை நிர்வாகிகளாக அமைத்து தமக்கு வேண்டியதை செய்துக்கொள்ளும் அடாவடியான ஆளுமை வரையிலும் நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பட்டியலிடுகின்றார். இதுவரை நான் எனதளவில் கொண்டிருந்த ஜெயலலிதா எனும் ஆளுமையின் பிம்பம் சுக்குநூறாய் போனது. 

அடுத்ததாக அண்ணாபல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முதல்வர் ஒதுக்கீட்டு முறையில் ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அநேக இடங்களில் அமைச்சர்கள் சிபாரிசோடு அரசு உயர்நிலை அதிகாரிகளின் பிள்ளைகள் உட்பட மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தவர்களுக்கு இடங்களை ஒதுக்கப்பட்டிருந்தது. பலகாலமாக இதுபோன்ற அராஜகங்கள் நடந்துவந்தாலும் அரசு ஊழியர்கள் தானுண்டு தன்வேலையுண்டு என்று இருக்கும் ஒரே காரணத்தினால் தான் இதுபோன்ற ஊழல்கள் நடக்கின்றன என்று வருத்தப்படுவதோடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் தன்னையே களத்தில் இறக்கி செயல்படுகின்றார். அதன் பயனாய் பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியில் உச்சநீதிமன்றம் அத்தகைய ஒதுக்கீட்டு முறையை நீக்குகின்றது. இது பெரிய சாதனை அல்லவா. இதுபோன்று பல இடங்களில் தன் கண்ணுக்கு முன்னால் நடக்கின்ற அநீதிகளை தன் பலத்திற்கு உட்பட்டோ மீறியோ காரியத்தில் இறங்கி சாதித்திருக்கிறார். 

கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப்பணியில் வேலையில் இருந்த சங்கருக்கு தன் தலையெழுத்தையே மாற்றப்போகும் அளவிற்கான சிக்கல் உண்டாகின்றது. தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கின்றார். சிறைத்துறையிலும் நீதித்துறையிலும் நடந்த (நடக்கின்ற) அநீதிகளைச் சொல்லிச் செல்கின்றார். 

சிறைவாசத்தில் பெற்ற அனுபவத்தை நிறையவே பகிர்ந்திருக்கின்றார். பீடிக்கட்டுகள்தான் சிறைக்குள் பணமாகி இருப்பதைப்பற்றியும் விவரிக்கின்றார். சிறை நிர்வாகத்தில் நடக்கும் ஊழலைப்பற்றியும் அரசியலைப்பற்றியும் சொல்கின்றார். பணவசதி இல்லாதவர்கள் ஜாமீனில் வெளிவரமுடியாமல் இருக்கும் ஏனையோர்கள், தங்கள் குற்றத்திற்கு தண்டனைக் கிடைத்தாலும் கிடைக்கக்கூடிய காலத்திற்கும் அதிகமாய் விசாரணை என்ற போர்வையில் விசாரணை நீட்டிக்கப்பட்டு அநியாயமாய் சிறையில் தண்டிக்கப்படுவதை அடிக்கோடிட்டு காண்பிக்கின்றார். பின்னாளில் ஜாமீனில் வெளிவந்தபிறகு சிறையில் சந்தித்த இசுலாமிய நண்பர் ஒருவருக்கு வழக்கிலிருந்து வெளிவர அவரது உண்மைத்தன்மையை ஆராய்ந்து வைத்து, தன்னால் முடிந்தவரை உதவிசெய்ய முயன்று, செயலை முடுக்கிவிட்டு அதில் வெற்றியும் அடைகின்றார். 

நீதித்துறையில் வெளிப்படையாக பார்க்கும் பொழுது எல்லாம் சரியான முறையில் நடப்பது போன்று தோன்றுவது மாயை என்றதோடு அங்கு உள்ளே நடக்கின்ற அவலங்களை தோலுரிக்கின்றார். அரசியல் காரணமாக ஒரு வழக்கை எத்தனை நீதிபதிகள் விசாரிக்கின்றனர் என்பதும், ஒரு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கவிருக்கும் வேளையில் நீதிபதி மாற்றப்படும் மோசடி நடப்பதையும் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்திச் சொல்கின்றார்.

ஒருமுறை நீதிமன்ற அறையைவிட்டு வெளிவரும் பொழுது தன்மேல் கொண்ட ஆத்திரம் மற்றும் விரக்தியால் பொய் புனைவுகளோடு குற்றம்சாட்டிய அதே டிஎஸ்பி பாலு நிற்கின்றார். அப்போது சங்கர் அவரருகில் சென்று 'என்ன பாலு, எப்படி இருக்க?' என்று கேட்கும்பொழுது அட்டகாசம். (ஒரு பி.ஜி.எம் பின்னால ஓட விட்டுருந்தமாதிரி இருந்துச்சு.)

கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக இவரது வழக்கும் நடக்கின்றது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்னும் முதுமொழிக்கேற்ப, ஆரம்ப காலத்தில் அதிகாரிகளால் இவர்மீது பொய்யாக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையின் மீது இறுதிக்கட்ட குறுக்குவிசாரணையில் சில சாட்சியங்கள் இறந்தும் பல சாட்சியங்கள் முன்பு பொய் சொல்லிவிட்டு பின்னர் பிறழ் சாட்சியங்களாய் மாறின. பல போராட்டங்களின் விடியலாய் ஓர்நாள், சாட்டப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுக்களிலும் இருந்து சங்கர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றார். 

சங்கர் அவர்களின் வாழ்வில் பல இடங்களில் முக்கிய திருப்புமுனையாக அமைந்து, அவருக்கு பலவழிகளில் உதவி செய்திட்ட மனிதர்களை பட்டியலிட விரும்புகின்றேன். பேராசிரியர் கல்யாணி, எஸ்.பி. அருண், நண்பர் ராஜசேகர், முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி உபத்யாய், வழக்கறிஞர் புகழேந்தி, டெகல்கா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் மணிகண்டன், மற்றும் இறுதி குறுக்கு விசாரணையின் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர்களை போற்றுகின்றேன். 

இப்படியாக ஒவ்வொருவரும் ஒரு துரும்பை எடுத்துப் போட்டதால்தான் தம்மால் முதலைகள் நிறைந்த ஒரு குளத்தில் நீந்திக் கரையேற முடிந்திருக்கிறது என்று சொல்லுவதோடு, இதுவரை பட்டதற்கு வருத்தப்படவில்லை மாறாக பெருமைப்படுவதாகவும் எழுத்தாளர் சொல்லி முடிக்கின்றார். 

சங்கர் அண்ணனுக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும். 

இதுபோன்று நிறைய சங்கர்கள் மறைந்து வாழ்ந்தும் வரலாம். பிரச்சினைகளில் சிக்குண்டும் இருக்கலாம். சமூகத்திற்கு உதவ நினைத்து தன் நலன்களை இழந்தும் நிற்கலாம். தயவு செய்து உங்கள் கண்முன்னால் அப்படி யாரேனும் இருந்தால் தோள் கொடுத்து அவர்களை நிமிரச்செய்யுங்கள். அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு வடிகாலாய் மட்டும் அமைந்துவிடாதீர்கள். நீங்களும் அரசு வேலைப்பார்ப்பவராய் இருந்தால் மறைமுகமாகவாவது உங்களால் முடிந்த அளவிற்கு வேண்டிய உதவியை செய்ய முன்வாருங்கள். நமக்கு சங்கங்களை விட இப்போது நிறைய சங்கர்கள் தான் அவசியமும் தேவையும் கூட.

இதுவே சவுக்கு சங்கர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பார் என்பது எனது அனுமானம். 

அங்குராசன்.
23-02-2018




சாயம் பூசிய வீடு (THE PAINTED HOUSE)

கடந்த வார இறுதியில் நடைப்பெற்ற சென்னை சுயாதீன திரைப்படத் தொடக்க விழாவில் திரையிடப்பட்ட ஆறு படங்களில் மூன்று திரைப்படங்களைப் பார்த்தேன். அவற்றுள் முதலானது 'சாயம் பூசிய வீடு' (THE PAINTED HOUSE) என்னும் மலையாளப்படம். ஒரு மனிதனின் புற உலகை விலக்கி அகம‌னத்துள் வசிக்கும் உள்பாத்திரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள், சிந்தனைகள் எப்படி அவன் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது என்பதை நிறுவுவது தான் இந்தப்படத்தின் கரு. 

சரி வாருங்கள், படத்தினைக்காணலாம்.

ஒரு ஊரின் கடற்கரையோரத்தில் கௌதம் என்கிற‌ முதிர்ந்த எழுத்தாளர் தனிமையாக‌ வாழ்கிறார். பார்ப்பதற்கு முகப்பொலிவுடனும் பொசுபொசு என்று பருத்திப்பஞ்சு போன்று நன்கே வளர்ந்திருந்த தூய தாடியும் கொண்டு முதிர்ந்த எழுத்தாளர் என்பதற்கேற்ப நடை உடை பாவனையோடு திகழ்கிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் எழுத்தும் எழுதுவதும் தான். தனிமையில் இருந்த போதிலும் தன்னைச்சுற்றி எதுவும் வெறுமை என்றொன்று இல்லாத உணர்வினை இவரது படைப்புக‌ளால் பெற்றிருந்தார். 

ஒரு நாள் கௌதம் வீட்டின் கதவு தட்டப்படுகின்றது. கதவை திறக்கையில் வெளியே அழகும் கவர்ச்சியும் ஒருசேர வாய்க்கப்பெற்ற இளம்பெண் ஒருத்தி நிற்கிறாள். தன்னை 'விஷயா' என்று அறிமுகம் செய்துகொள்வதுடன், ஓரிரவு மட்டும் தங்கிக்கொள்ள இடம் கிடைக்குமா என்று கௌதமிடம் வேண்டி விண்ணப்பிக்கிறாள். சிறிது யோசித்துவிட்டு கௌதமும் அவள் தங்குவதற்கு சம்மதித்தும் விடுகிறார். 

இருவரும் பேசிக்கொள்கின்றனர். கௌதமிடம் ஏன் இதுவரை திருமணம் செய்யவில்லை, ஏன் இதுவரை தனிமையிலேயே வாழ்கிறீர்கள் உட்பட நிறைய கேள்விகள் கேட்கிறாள். அதற்கெல்லாம் கௌதமும் முறையாக பதிலளிக்கிறார். விஷயாவும் கௌதமை செல்லமாக 'குட்டூ' என ஒவ்வொரு முறை அவரிடம் பேசும்போதும் அப்படியே அவரை அழைத்து பேசுகிறாள். இவளது நலினமான பேச்சில் கௌதமும் இளகுகிறார். ஒருநாள் கௌதம் விஷயாவின் அறைக்குள் அவளைக்காண அவளை அழைத்துக்கொண்டே செல்கிறார். உள்ளே அவள் அறையில் காணாமல் போயிருப்பாள். குளியலறை திறந்திருக்கும். தண்ணீர் சப்தமும் கேட்டுக்கொண்டிருக்கும். விஷயா என்று மீண்டும் அழைத்துப்பார்ப்பார். பதில் எதுவும் திரும்ப கிடைக்காது. சற்று முன்னேறி அவள் இருக்கிறாளா இல்லையா என்பதை உறுதி செய்ய குளியலறைக்கு நேராக வந்து நிற்கும் கௌதம் சற்று வாயடைத்து அமைதியாக நிற்கிறார். காரணம் அவர்கண்ட காட்சி. ஆம் விஷயா உள்ளே தானிருந்தாள். உடம்பில் ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் குளித்துக்கொண்டிருப்பாள். (கௌதமுடன் சேர்ந்து நேயர்கள் நாங்களும் அக்காட்சியினை எந்தவித கத்தரிப்புகளுமின்றி முழுமையாகவே கண்டோம் எனக்கூறிக்கொண்டு). கௌதமை பார்த்த விஷயா, எந்தவித படபடப்புமின்றி சாதாரணமாக வெளியே வருவாள். கௌதம் வருத்தம் தெரிவிப்பார், விஷயா பரவாயில்லை, பார்க்கத்தானே செய்தீர்கள், ஒன்றுமே செய்யவில்லையே என்று நெகிழும் குரலில் கௌதமின் தாபத்திற்கு தூபம் போடுவாள். இதைத் தொடர்ந்து அனைத்து வேளைகளிலும் கௌதமுடன் நெருக்கமாக இருப்பது ஒன்றையே வேலையாக வைத்திருப்பாள். இவ்வாறு ஓரிரவு தங்க வந்தவள் அதற்கு மேலும் தங்குகிறாள். 

விளையாட்டாகவோ வினயமாகவோ கௌதமின் மடிக்கணினியில் கௌதம் அப்போது எழுதிக்கொண்டிருந்த புத்தகத்தின் மூலமெய்நகலை அழித்துவிடுகிறாள். கௌதமிடம் தான் என்ன செய்திருந்தாலும் தன்மேல் கோபம் கொள்ளக்கூடாது என‌ முன்னமே சத்தியம் வாங்கியிருப்பாள். கௌதம் கோபமடைந்தாலும் இவளது பேச்சின் மயக்கத்தில் அமைதியாகிவிடுகிறான். எதற்காக இப்படி செய்தாய் என்று கௌதம் கேட்பதற்கு விஷயா 'இன்று இதனை நான் செய்யாவிட்டால் நாளை இன்னொருவர் செய்துவிடுவர்' என்பாள். உண்மையில் கௌதமின் எழுத்துகள் இதைவிட சிறப்பானது என்றும் கௌதம் நினைத்தால் இதைவிட நன்கு எழுதமுடியும் என்று கூறிவிட்டு சென்றுவிடுவாள். கௌதம் அன்றிரவு அமர்ந்து சில தாள்கள் மண்டையை பிழிந்து இன்னும் சிறப்பாக எழுதிவைத்து, மறுநாள் விஷயாவிடம் காண்பிப்பார். அவள் படித்துவிட்டு அனைத்தையும் ஒவ்வொன்றாக தீயில் போட்டு பொசுக்கி எரித்து விடுகிறாள். இதனை கண்ட கௌதம் பொறுமையிழந்து கோபமடைகிறார். என்ன காரியம் செய்து கொண்டு இருக்கிறாய்? நீ யார்? உன்னை யார் இங்கே அனுப்பியது? எதற்காக இங்கே வந்தாய்? என்னத்திற்காக எனது படைப்புகளையெல்லாம் அழித்தாய்? என அவளை நோக்கி கத்துவார். அவள் நீலிக்கண்ணீர் வடிப்பாள். மீண்டும் படைப்பின் மீது குற்றம் சொல்லுவாள். கண்ணீரைக்கண்டதும் கௌதமும் கோபமிழந்து மன்னித்துக்கொள் என்று விஷயாவிடமே சரணடைவார். 

அடுத்த நாள், கதவு தட்டப்படுகின்றது. கௌதம் சென்று யாரென்று பார்க்கிறார். ராகுல் என்னும் இளைஞன் தனது நான்கு சக்கரவண்டி பழுதாகி நின்றுவிட்டது எனவும் சரிசெய்ய காலம் ஆகுமெனவும் தன்னை அறிமுகம் செய்துவிட்டு, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுவிட்டு, உள்ளே அனுமதித்தால் கறைப்பட்ட தன் கைகளை கழுவிக்கொள்வதாகவும் கௌதமிடம் கேட்கிறான். கௌதம் அனுமதி வழங்கியதும் உள்ளே வந்து கைகளை கழுவியப்பின் அமர்ந்துகொண்டு பேச ஆரம்பிக்கிறான். விஷயா, கௌதம் உடன் சேர்ந்து ராகுலும் தேநீர் அருந்துகிறான். அவ்வப்போது விஷயாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொள்கிறான். ராகுல், கௌதமிடம் ஒருமுறை மலைமீது அழகான இயற்கை சூழலில் அமையப்பெற்ற தனித்த தன் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்கிறான். கௌதமும் மறுமொழியாக தற்போது முடியாது, இன்னொருநாள் வருகிறேன் என்கிறார். பேசிமுடித்ததும் ராகுல் விடைபெறுகிறான். 

இதுவரை எழுதியது எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது. இனி எழுத ஒன்றுமில்லை. வாசிக்கலாம் என்றெண்ணி வீட்டின் வாராண்டாவில் வாசித்துக்கொண்டிருப்பார், கௌதம். அவ்விடம் விஷயாவும் விசயம் செய்வாள். கௌதமின் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கி விட்டு, இதனையே வாசித்துக்கொண்டிருந்தால், என்ன சுகம் காணமுடியும்? என்னை வாசியுங்கள் என்பாள். கௌதம் முற்றிலும் மதியிழந்து அவளின் பின்னால் தொடர்ந்து அவளது படுக்கையறைக்கு சென்று அவளிடம் சல்லாபித்து கூடிக்களிக்க‌ முற்படுவார். திடீரென்று நினைவு திரும்பியது போல் 'இது தவறு. என்னால் இது முடியாது. நான் வயதானவன்' என்று அவளிடம் கூறிக்கொண்டு தன்னை நினைந்து நொந்துகொள்வார். அதற்கு விஷயா 'இதற்கு வயதேது? வயதிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? எல்லாம் தெரிந்த நீங்கள் இப்படி பேசக்கூடாது. உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையென்று நினைக்கிறேன்' என வருத்தத்தோடு மறுமொழி கூறுவாள். கௌதம் அவள் கூற்றுக்கு மறுப்பு சொல்லிவிட்டு அவளை கட்டி அணைத்துக்கொள்வார். 

மறுநாள் வீட்டின் கதவு தட்டப்படுகின்றது. கதவைத்திறந்து பார்த்தால் வெளியில் எவரும் இல்லை. வீட்டினுள் இருந்து புதிதான சப்தம் கேட்க விரைந்து உள்ளே நுழைகிறார், கௌதம். வந்துப்பார்க்கையில் நாற்காலியில் ராகுல் சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். இவனைப்பார்த்ததும் கௌதம் மனதுக்குள் 'தொந்தரவு வந்துவிட்டது' என்று சலித்துக்கொள்வதோடு என்ன காரணத்திற்கு வந்தான் என கேட்பார். அதற்கு ராகுல் 'உங்களை எனது வீட்டிற்கு அழைத்துச்செல்லவே இங்கு வந்திருக்கிறேன். கிளம்புங்கள். போகலாம்.' என்பான். கௌதமிற்கு வியப்பாகவும் கடுப்பாகவும் சற்று நகைப்பாகவும் இருந்தது. ராகுலிடம் தற்போது தன்னால் வர இயலாது என மறுக்கிறார். அதுவரை அமைதியாய் பேசிக்கொண்டிருந்த ராகுலின் உடல்மொழியில் அப்போதிருந்து மாற்றம் தெரிய ஆரம்பிக்கிறது. (ராகுலின் நடிப்பு சும்மா சொல்லக்கூடாது, அட்டகாசம்.) ராகுல் கோபம் கலந்து சிரித்துக்கொண்டே அடுத்து 'இவ்வளவு தூரம் நான் வந்துவிட்டு சும்மாவாக திரும்ப முடியாது. கண்டிப்பாக நீங்கள் வந்தே ஆக வேண்டும்' என முரண்டு பிடிக்கிறான். கடுப்பாய் போன கௌதம் ராகுலோடு வாக்குவாதம் செய்ய, திடீரென்று ராகுல் எழுந்து கௌதமினை தாக்கி கீழே சாய்த்து அவரிரண்டு கைகளையும் பின்னால் இழுத்து கட்டியதோடு, கண்ணையும் கட்டி, வண்டியில் ஏற்றி தூக்கி சென்றுவிடுகிறான். இது நடந்தசமயம் விஷயா அவளது அறைக்குள் குளித்துக்கொண்டிருந்ததால், அவள் கௌதமின் நிலையினை அறிந்திருக்கவில்லை என நம்புவோம்.

கௌதமினைக்கட்டி தூக்கிக்கொண்டு மலைமீதிருந்த தன் வீட்டிற்கு ராகுல் செல்கிறான். கட்டுக்களை அவிழ்த்ததும் கௌதம் ராகுலைப்பார்த்து எதற்காக என்னை இப்படி இங்கு கொண்டுவந்தாய்? உனக்கு என்ன வேண்டும்? எனக்கேட்டப்படி இருப்பார். சிரித்துக்கொண்டே நின்றிருக்கும் ராகுல் அப்போது கௌதமினை பார்த்து தெளிவுறக்கூறுவான். நாம் பேசியபடி என் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். அமைதியாக நல்ல முறையில் நேரம் கடத்தினால் நல்லதாய் போகும். மீறி சாமர்த்தியமாய் தப்பிக்க நினைத்து ஏதேனும் செய்ய முற்பட்டால் கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன் எனவும் கூறி கௌதமினை அடித்தும், குத்தியும் பின் ஏறி ஒரு உதைவிட கௌதம் சுருண்டு கீழே விழுகிறார். பின் தடுமாறி எழுகிறார். வீட்டினுள் இழுத்துச்செல்லப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார். வீட்டினுள் மட்டும் சுதந்திரமாகத் திரியலாம். மீறி தப்பிக்க முயற்சித்தால் ராகுலினால் தண்டிக்க நேரிடும். இதற்கிடையே ராகுல் வீட்டில் இல்லாத பொழுது வீட்டின் அனைத்து அறைகளையும் அலசியெடுக்கிறார். வீட்டின் பெரும்பகுதிகளில் RSS என்றே எழுதப்பட்டிருந்தது. (என்ன குறிப்பு என்று நேயர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்று நம்புவோம்). ஏதேனும் அவர்களைப்பற்றி துப்போ அல்லது தாம் தப்பிக்க வழி ஏதாவது கிடைக்குமோ என வீட்டையே புரட்டிப்போட்டு இருக்கையில் ஒரு நீண்ட இரும்பு கம்பி கிடைக்கிறது. அந்த நேரம் ராகுல் வண்டியின் சத்தம் கேட்கவும் விறுவிறுவென்று வீட்டின் மேலிருந்து இறங்கி வந்து பார்க்கையில் விஷயாவும் ராகுலும் வண்டியிலிருந்து இறங்குகிறார்கள். உடனே மேலிருந்து எடுத்து வந்த இரும்பு கம்பியை தாம் படுக்கவைக்கப்பட்டிருந்த கட்டிலின் மீதிருந்த படுக்கை மெத்தையின் விரிப்பின் கீழ் ஒளித்துவைத்துவிட்டு கண்மூடி படுத்துறங்குவது போல் பாசாங்கும் செய்கிறார். 

வீட்டின் உள்ளே நுழைந்த விஷயா நேராக கௌதம் படுத்திருந்த அறைக்குள் நுழைந்து கௌதமினைத் தட்டி எழுப்பி அருகில் ஒரு சிறு நாற்காலியினைப் போட்டு அமர்கிறாள். கண்விழித்து பார்த்த கௌதம் படுக்கையிலிருந்து எழுந்து அமர்கிறார். விஷயாவையும் கடத்திவந்துவிட்டானா இந்த ராகுல் என்றெண்ணி அவளிடம் கேட்கிறார். அவள் கூறிய மறுமொழியிலிருந்து விஷயாவிற்கு ராகுல் ஏற்கனவே நல்ல அறிமுகம், இருவரும் நல்ல நண்பர்கள் என தெரிய வருகிறார். ஆக விஷயாவும் ராகுலும் திட்டம்போட்டுத்தான் தம்மை இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதனையும் அறிந்து கொள்கிறார். யாராக இருப்பார்கள். எனக்கென்று குழந்தைகளும் இருந்திருக்கவும் எங்கும் வாய்ப்பில்லை. வேறு யாராக இருக்கும் என சிந்தித்தார். எதற்காக கௌதமை கடத்தி வந்தார்கள் என்பதைப்பற்றி அவர்களிருவரும் அவரிடம் வாய் திறக்கவில்லை. கேட்டாலும் சொல்வதாயில்லை. தொடர்ந்து கேட்டதற்கு 'எல்லாம் ஒருவேளை ஏதேனும் ஒரு கதையாகவோ அல்லது கனவாகவோ இருக்கலாம்' என்று மட்டும் விஷயா சொல்லிச்செல்வாள். விஷயா கொடுக்கும் உணவையும் உன்ண மறுக்கிறார், எழுத்தாளர் கௌதம். மறுநாள் காலையில் எதேச்சையாக கௌதம் வீட்டின் மாடிக்கு செல்வார். அங்கே விஷயா ராகுலின் மடிமீது அமர்ந்து ராகுலினை கொஞ்சிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து தன்னறைக்கு திரும்பிவிடுவார். விஷயாவும் ராகுலும் பின் கீழிறங்கி அவர்களறைக்கு போன பின்பு கௌதம் மேலேறிச்சென்று மீண்டும் எதையோ அலசித்தேடுகிறார். ஒரு அட்டைப்பெட்டி கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. அந்தப்பெட்டிக்குள் கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றிருந்தது. அதில் விஷயாவும் ராகுலும் தம்பதியினராய் இருந்தார்கள். அந்தப்பெட்டிக் கட்டப்பட்டிருந்தக் கயிற்றை எடுத்துவந்து தன் படுக்கையின் விரிப்பின் கீழ் ஒளித்து வைத்துவிடுவார். அன்றிரவு அவர்கள் உறங்கும் வேளைப்பார்த்து கயிற்றைக்கட்டி வீட்டின் மேல் கட்டிடத்திலிருந்து கீழிறங்கி தப்பித்து ஓடுகிறார். நடுவழியில் போய்க்கொண்டிருக்கும் பொழுது ராகுல் வண்டியுடன் வந்து மீண்டும் அவரைக் கட்டித்தூக்கி வந்து வீட்டில் இறக்கிவிடுகிறான். மீண்டும் அடிக்கிறான், மிதிக்கிறான், தாக்குகிறான், எச்சரிக்கிறான். இனிமேல் தப்பிக்க முற்பட்டால் கருணைப்பாராது கொல்லப்படுவீர்கள் என சொல்லிவிடுவான். வேண்டுமென்றால் தம்மை தாக்கி விட்டு, தப்பித்துக்கொள்ளலாம் என்றும் கூறுகிறான். 

மறுநாள் கௌதம் கனவில் விஷயா வந்தாள். அருகில் அமர்ந்து கௌதமின் கன்னத்தை வருடுகிறாள். திடீரென நிர்வாணமாய் காட்சித்தருகிறாள். அவளது இரு முலைகளும் நன்கு திரண்டு நிற்கின்றன. அதன் இரு காம்புகளும் விரைத்திருக்கின்றன. அவளது இடுப்பும் அதன் மடிப்புகளும் தொப்புளும் பார்ப்பவரை கிற‌ங்கச்செய்கிறது. அவளது பிருஷ்டங்கள் இரண்டும் அப்படியும் இப்படியுமாய் அவள் நடக்கையில் அசைகின்றன. (கௌதமின் இந்த கனவினை, படம் பார்க்கும் நேயர்கள் நாங்களும் கண்டுக்களித்தோம் எனக்கூறிக்கொண்டு). கண் விழித்து பார்க்கையில் கனவே நினைவாகவும் கௌதமினை ஆட்கொண்டது. விடிந்ததும் வீட்டின் வெளியே ராகுலின் வண்டி இல்லை என்பதை அறிந்து கொண்டு வீட்டின் மாடிக்கு செல்கிறார். அங்கே ஒரு சாளரத்தின் திண்டில் விஷயா அமர்ந்து புத்தகம் ஒன்று வாசித்துக் கொண்டிருப்பாள். அவ்வேளையில் விஷயாவிடம் தவறாக் நடந்து கொள்ள கௌதம் முயல்கிறார். விஷயா மறுக்கிறாள். இவ்வேளையில் ராகுலும் அங்கு வரவே கௌதமின் ஆணுறுப்பிலேயே தன் காலால் தாக்கி கௌதமினை சுருண்டு விழச்செய்கிறான். 

கௌதமின் உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகம் தப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் தொடர்கிறது. தனது ஆழ்மனதில் எதை எதையோ தேடும் கனவு தொடங்குகையில் பழைய எழுத்தாளர் இப்போது தனது சுதந்திரத்திற்காக போராடுகிறார். ராகுல் கௌதமிடம் உங்கள் எழுத்துகள் அனைத்தும் மற்றவர் வாயினால் சொல்லப்பட்டு காதில் வாங்கி எழுதப்பட்டு இருக்கின்றன. அனைத்தும் தங்கமும் வைரமுமாக இருக்கின்றன. உண்மையில் மனதார நீங்கள் அப்படியே இல்லை. ஏன் இப்படியான போலியான வாழ்க்கை வாழ்கிறீர்கள். இன்றைக்கு உங்கள் மனதில் எவ்வளவு தூரத்திற்கு என்மீதான வெறுப்பு வந்திருக்கிறது பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். உண்மையில் நீங்கள் யாரென்று தெரியும் என கேள்வி மேல் கேள்வி கேட்க விடைத்தரமுடியாமல் தன்னளவில் குறுகி நின்றபடியிருந்தார். உன் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அடுத்து கூறுகிறார். கௌதமிடம் ராகுல் 'என்னை வெறுக்குறீர்களா' என கேட்டப்பொழுது கௌதம் மறுத்துவிடுகிறார். அதற்கு ராகுல் தன்னை சபித்து பழித்துவிட்டு இந்த வீட்டை விட்டு வெளியேறலாம் என்று அவரிடம் கூறுகிறான். அதற்கு கௌதம் 'ராகுலின் மீதான வெறுப்புணர்வுடன் அதற்கு ஈடாக தமது இதயத்தை தேற்றிக்கொண்டு அதற்கு விலையாக அப்படியொரு சுதந்திரம் தமக்கு தேவையில்லை' என்கிறார். ராகுல் தலையிலடித்துக்கொண்டு அவ்விடம் விட்டு விலகிச்செல்கிறார். 

ஒரு பகல்பொழுதில் ராகுல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் வீட்டுக்கு வெளியே ஒரு மரத்தில் கயிற்றால் ஊஞ்சல் கட்டி விஷயா காற்று வாங்கியபடி ஆடிக்கொண்டிருக்கையில் கௌதம் அங்கே வருகிறார். விஷயாவிடம் ரகசியத்தை கண்டுபிடித்ததாக கூறுகிறார். என்னவென்று கேட்கையில் கையிலிருந்த ஒரு புகைப்படத்தைக் காண்பிக்கிறார். அந்தப்படத்தில் தாமும் விஷயாவும் இருப்பதாக விஷயாவிடமே காண்பித்து கூறுகிறார். அந்த புகைப்படம் வீட்டின் முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த அந்த அட்டைப்பெட்டியினுள் இருந்த அதே புகைப்படம் தான். (படம் பார்க்கும் நேயர்களுக்கு புரிந்திருக்கும். அந்த புகைப்படத்தில் உண்மையில் இருந்தது விஷயாவும் ராகுலும் தான் என்று.) இதைப்பார்த்து அதிர்ந்துவிட்ட விஷயா கௌதமிற்கு புத்தி பேதளிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்கிறாள். அவ்விடம் விட்டு நீங்குகிறாள். 

கௌதம், அன்றிரவு ராகுல் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது, முன்பு எடுத்து வைத்திருந்த இரும்பு கம்பியினை எடுத்து தன் தலைக்குமேலே உயர்த்தி பிடித்தபடி நின்று ராகுலைத்தாக்க ஆயத்தமாகிறார். அவ்வேளையில் விஷயா அவ்விடம் வந்துப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்து 'குட்டூ' என அலறுகிறாள். கௌதம் விஷயாவைப்பார்த்து விட்டு ராகுல் பக்கம் திரும்பி பார்த்தபோது ராகுலும் அவன் படுத்திருந்த கட்டிலும் இருந்த இடத்தில் இல்லாது மாயமாகி போயிருக்கும். அப்படியே திரும்பி விஷயா நின்றிருந்த பக்கம் பார்க்கும்பொழுது விஷயாவும் மாயமாய் மறைந்து போயிருப்பாள். கௌதமிற்கு முன்பாக திடீரென்று ஆளடி உயரத்தில் முகம்பார்க்கும் கன்ணாடி ஒன்று சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும். அதில் தனது உருவம் கையில் இரும்புக்கம்பியோடு ஆங்காரமாய் நிற்பதை கௌதம் பார்த்துவிடுவார். பார்த்தமாத்திரத்தில் நெஞ்சடைத்து தரையில் விழுகிறார். 

இப்படியாக படமும் முடிகிறது. 

வெளி உலகத்துடன் எவ்விதமான தொடர்புமில்லாமல் வசித்து வந்த எழுத்தாளர் கௌதம், எழுத்தாளர் நசிகேதனைப் பற்றி நாவல் எழுதுகிறார். அதில் வரும் கதாபாத்திரம் மரணமடைகிறது, இதன் வேதனையின் காரணமாக இவருக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது. கதாபாத்திரத்தின் மரணம் அவரை உளுக்கிப்போடுகிறது. 


பின்குறிப்பு: இந்தப்படத்திற்கு சி.பி.எஃப்.சி அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. காரணம் நேயர்களுக்கு தெரிந்திருக்கும். படத்தின் மூன்றுக்கு மேற்பட்ட காட்சிகளில் விஷயா எனும் முக்கிய பெண்பாத்திரம் முழு நிர்வாணமாகத் தோன்றும். படத்தின் அனுமதிக்கு இக்காட்சிகள் அகற்றப்படவேண்டும் என்று கூறியும் படக்குழுவினர் சமரசத்திற்கு உடன்படாது நீக்கமுடியாது என்றுவிட்டனர். விளைவுதான் இந்தியாவில் தடைசெய்யப்பட்டப்படம் என்று அறிவித்துவிட்டார்கள். 



அங்குராசன். 

சுமையும் புன்னகையும்

சில நிகழ்வுகள் குறிப்பிட்ட நேரத்தில் எதேச்சையாய் நம்மை சிந்திக்கவைக்கக்கூடும். அதுவே நிகழ்வின் இடம், பொருள் பொறுத்து அதன்வழி நம் சிந்தனையிலினின்று பாரத்தோடு கூடிய வலியானதாய் மாறவும்கூடும். இத்தகையச் சுமையை இறக்கிவைக்கவும் அவ்வப்போது சில வாய்ப்புகளும் நமக்கு கிடைக்கப்பெறும். ஒருமித்தமனதோடு அதை ஏற்றுக்கொண்டு முடித்துவிட்டு கடந்தால் நொடிப்பொழுதில் மனத்தில் திடீர் ஒரு எடைக்குறைவு உண்டாகி வெற்றிடம் போல் உருவாகி அலாதியான தன்னிறைவான மகிழ்ச்சி பெருகியே தீரும். அது எதுவாகினும்.

சாலையைக் கடக்கையில் அன்னியர் ஒருவர் என்னிடம் வந்து "சாப் ஆப்கோ ஹிந்தி மாலுமே க்யா" என்றார். அவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கையிலேயே நான் அவரையும் அவருக்கு அருகில் சற்றுத்தூரத்தில் ஒரு குழந்தையோடு ஒரு பெண்மணி நின்றிருப்பதையும், அந்தப்பெண் அவ்வப்போது எங்களை நோக்கி பார்த்துவிட்டு திரும்பிக்கொள்வதுமாய் இருப்பதையும் கவனித்துவிட்டேன். இந்தக்காட்சிகளைப் பார்த்தும் அவர் வினவிய கேள்வியையும் கேட்டபின்னர் என‌க்குள்ளே ஓர் உள்ளுணர்வு. 'நம்மிடம் இருந்து ஏதோ பொருள்தான் எதிர்பார்த்து நிற்கிறார்' என்றும் 'இவர் உண்மையானவர் கிடையாது. ஏமாற்றி பணம் வசூலிக்கிறார் போலும்' என்றும் தோன்றியது. ஆகவே அவ்விடத்திலிருந்து நகரும்பொருட்டு 'சாரி' எனக்கூறிவிட்டு கடந்தும் விட்டேன்.

சிறிது தூரம் கடந்தபின்பு மீண்டும் அவர்களை நோக்கி ஒருபார்வையை வீசினேன். அவர்களோ சாலையைக்கடந்து வரும் மற்றவர்களிடம் கேட்பதை தொடர்ந்திருந்தார்கள். ஒருகணம் நின்று யோசித்துவிட்டு வீடு திரும்பியாயிற்று.

அன்றாடம் இது போன்று ஆயிரம் நிகழ்வுகள் நம்மைச்சுற்றி நடந்தாலும் அந்த நிகழ்வு மட்டும் ஏனோ என் மனத்துள் உறுத்திக்கொண்டே இருந்தது. தூக்கமும் வரவில்லை. தூங்குவதற்கு கண்ணை மூடினாலும் அந்த நபர் அருகே வந்து 'சாப் ஆப்கோ ஹிந்தி மாலுமே க்யா' எனக்கேட்பது போன்ற ஒரு பிரமை. கூடவே அதே பெண்மணி அந்தக்குழந்தையோடு நிற்பது போன்று. என்னடா இது என்று தலையைப்பிய்த்துக்கொண்டு வலப்புறம் இடப்புறம் என மாற்றி மாற்றி ஒருசாய்த்துப்படுத்தும் உருண்டும் புரண்டும் தூக்கம் வந்தபாடில்லை. பேசாமல் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து வந்திருந்தாலாவது நிம்மதியாய் இருந்திருக்கும் போலும் என்ற மனநிலைக்கு உள்ளாகியாயிற்று. இனிமேல் அங்கு சென்று பார்த்தால் அவர்கள் அங்கு இருப்பார்கள் தானா. ஒருவேளை அவர்களுக்கு உண்மையிலேயே இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்து உதவிக்கேட்டு நிற்கையில் செவிமடுக்காது கிளம்பிவந்துவிட்டோனோ. இது போன்ற பல கேள்விகள் வரிசையாய் என்னை ஒரு குற்றவாளியாக எண்ணுமளவிற்கு வந்தவண்ணம் இருந்தது. உண்மையில் அதுவும் குற்றம் தானே.

இரவும் கடந்தது. பொழுதும் விடிந்தது. காட்சிகள் மாறின. ஆட்களும் மாறினார்கள்.

கையில் சுத்தமாய் பணம் இல்லை. பணம் எடுக்கலாம் என்று தானியங்கி பணம் வ‌ழங்கி இருக்கும் ஒருகடையை நோக்கி சென்று கொண்டிருக்கையில் கடையின் வாசலில் நல்ல அடர் கருப்பானதொரு நிறத்தில் மெலிந்த தேகத்தோடு பழைய‌ சேலை ஒன்று உடுத்திய இளம்பெண் ஒருத்தி இடுப்பில் ஒரு கைக்குழந்தையோடு நின்றிருந்தாள். என்னைப்பார்த்ததும் என்னை நோக்கி ஓடிவந்தாள். நான் சற்று பதறியே போனேன். அருகில் வந்ததும் சற்று மூச்சடைக்க இளைத்தப்படி ஆசுவாசப்படுத்திக்கொண்டு "அண்ணா.. சாப்பாடு எதாச்சும் வாங்கிக்கொடுண்ணா. கொழந்த இருக்குணா" என்றாள். முன்பே பாக்கெட்டில் இருந்து எடுத்து வைத்திருந்த பத்து ரூபாய் நாணயத்தை அவளது கையில் திணித்துவிட்டு சென்று கொண்டே இருந்தேன். பணம் எடுத்துவிட்டு திரும்புகையில் மீண்டும் வந்து வழிமறித்ததோடு சாப்பாடு ஏதாச்சும் வாங்கிக்கொடுண்ணா என்றபடி குட்டிப்போட்ட பூனையொன்று அங்குமிங்கும் சுற்றுவதைப் போன்று என்னை வட்டமிட்டாள். நான் எதுவும் கண்டுகொள்ளாததைப்போன்று அவ்விடம் விட்டு அகன்றேன்.

அவளின் தேவை பொருளல்ல, பணமல்ல, வயிறாற ஒரு வேளை உணவு. திரும்பி அவளைப்பார்க்கையில் வேறு யாரேனும் வாங்கித்தருவார்களா என்ற எதிர்பார்ப்போடு சுற்றும் முற்றம் நோக்கியபடியிருந்தாள். அருகில் ஏதேனும் சாப்பாட்டுக்கடை இருக்கிறதா எனப்பார்க்கையில் அதிகமில்லை. அப்படியே இருந்தாலும் மாலை 5 மணி என்பதால் மதிய உணவும் இருக்காது இரவு உணவும் செய்திருக்கமாட்டார்கள். என்ன செய்வது என வெறும் கையைப்பிசைந்து கொண்டு நின்றிருக்கையில் ஒரு சிறிய கடையின் பெயர்ப்பலகை தூரத்தில் தெரிந்தது. அங்கு சென்று கேட்கையில் நல்ல வேளையாக‌ எலுமிச்சை சாதமும் சாம்பாரும் வெஞ்சனத்திற்கு வண்ணவண்ண சிறுசிறு அப்பளங்களும் இருந்திற்று. இரண்டு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து நடையைக்கட்டினேன். இன்னொரு பொட்டலமானது சாலையோரம் அமர்ந்திருந்து த‌ன் மகவுக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்த இன்னொரு பெண்ணொருத்திக்கு. பார்ப்ப‌தற்கு அவளை ஒத்த சாயலிருந்தது. அவளோடு தான் இவளும் வந்திருக்கக்கூடும் என்பதனால் வாங்கியாயிற்று. உண்மையும் அதுதான் என்பது பொட்டலங்களை அவர்களிடம் கொடுக்கையில் அறியமுடிந்தது. இருவரும் ஒரு புன்னகையோடு இன்முகத்துடன் வாங்கிக்கொண்டார்கள். வாங்கிய வேகத்தில் உள்ளே இருப்பதை ஆவலுடன் பிரிக்கமுற்பட்டார்கள். அவ்வேளையில் அவர்களிடம் "இதுதான் கிடைத்தது" என்றேன். அவர்கள் என்னை பார்த்து வார்த்தைகள் ஏதுமின்றி தலையை சரியென அசைப்பதுபோல் அசைத்துக்கொண்டு மீண்டும் ஒரு புன்னகை அளித்தபடி பொட்டலங்களை எடுக்க ஆரம்பித்தார்கள். நானும் அவர்களிருந்தவிடம் இருந்து கிளம்பி பேருந்து நிறுத்தம் வந்து சேர்ந்தேன். நான் வந்ததும் பேருந்தும் வந்தது. இருக்கையும் கிடைத்தது. சுமையும் இறங்கியது.

அங்குராசன்.

                                                           ( மாதிரிப்படம் )