சுவையான சம்பவம் தான், இருந்தாலும் என் வாயால் இதை எப்படி உங்களிடம் சொல்வேன்...!? சொல்லாமலும் இருக்க இயலவில்லை.... சரி சொல்லிவிடுகிறேன் ... படித்துப் பார்த்துவிட்டு சிரிக்கலாம் (சிரிப்பு வந்தால்), ஆனால் கோபப்பட்டு, என்னை எங்கேனும் காண நேர்கையில், அடிக்காமல் இருக்கணும்... இதான் நம்ம 'டீலிங்கு'....
அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் போது கைப்பேசியில் பாடல்கள் கேட்டுக்கொண்டே வருவது வழக்கம் ... இன்றும் அப்படித்தான்.. ஆனால், தலையணி கேட்பொறி (ஹெட்செட்) கொண்டுவராததாலும், பேருந்தினுள் வீண் பேச்சுக்களாலும், வாகன இரைச்சல்களினாலும், வேறு வழியின்றி, சத்தமாக வெளியில் பாடல்களை ஒலிக்கச் செய்தேன்... நிறுத்தத்தைப் பேருந்து அடைந்ததும், அப்படியே இறங்கி, அங்கிருந்த மா.போ.பயணச்சீட்டு வழங்கும் மையத்தின் முன்னிருந்த வாடிக்கைப்பயணிகளின் வரிசையில் தஞ்சமடைந்தேன், சீட்டினை புதுப்பிக்க... என் கைப்பேசியில் அப்போது "ஒருநாளும் உனை மறவாத" பாடல் ஒலித்தவண்ணம் இருந்தது... மிகப்பிடித்தப் பாடல் வேறு...
மெய்மறந்து ரசித்திருந்த வேளையில், வரிசையில் என் முறை வந்தது.. உள்ளிருந்த அலுவலரிடம் பழைய மாத பயணச்சீட்டு அட்டையையும், நிரந்தர பயண அடையாள அட்டையையும் கொடுத்து, புதுப்பித்து, வரும் பின்தேதியிட்டு, புதுப்பயணச்சீட்டு தரக்கோரினேன்....
அவரோ "ஆயிரம் தந்தால் புதுச்சீட்டு" என்றார்... சிரித்துக்கொண்டே அவர் சொன்னதால், விளையாட்டுக்குத்தான், கேட்கிறாரோ என்று நான் எண்ணியதோடு மட்டுமில்லாமல்.... "இதோ பாருங்கள் நிரந்தர அடையாள அட்டை... ஆயிரம் கொடுத்து முன்னாடியே வாங்கியாச்சு.... இந்த மாசத்துக்கு மட்டும் புதுப்பித்துக் கொடுங்கள்" என்று அந்நியாயத்தை நான் நியாயப்படுத்த ....
பின்னர் அவர் "சார், இங்கப் பாருங்க... ரூ.1000 போட்டுருக்கா" என பழைய மாத அட்டையைக் காட்டி சொன்னதுடன் "இதே போல் ஆயிரம் தந்தால் புது அட்டை கிடைக்கும்" என்றும் சொல்லிமுடிக்கும் முன்பு தான், எனக்கு விளங்கியது, 'ஆயிரம் தரவேண்டும் என்பதை மறந்து இருந்தது'...
"அச்சச்சோ இப்படிலாமா அங்கு நீ வந்து மாட்டிக்கிடுவ" னு என்னிடமே நான் கேட்டுக்கொண்டே , அவர் கையிலிருந்த என் அட்டைகளை வாங்கிக்கொண்டு, "ஒரு நிமிடம்" என்று சொல்லி ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன்... அவரும் புதுச்சீட்டைக் கொடுத்தார்... அவர் ஒன்று கேட்டார் பாருங்க, அங்க தான் நான் என்ன பண்ணிட்டு யோசிச்சுட்டு இருந்தேன்னு எனக்கே புரிஞ்சது...
(முன்பு சார் என்றவர்) "தம்பி, நீங்க கேட்ட பாட்டுங்க எல்லாமே ஜானகி அம்மா பாடுனதா இருக்கே... ரொம்ப நல்ல பாட்டுங்க தம்பி... இப்படி ஒரு பாடகி, இனி பொறந்து கூட வரமுடியாது .... அவுங்க நல்லா இருக்கணும்"னு சொல்லி முடித்தார் பாருங்க....
அம்மா பாடல்களை வெளி மறந்து கேட்டுக்கொண்டே இருந்ததால, நானும் பணம் கொடுக்கவேணும் என்பதையே அயத்து நின்று பேசியுமிருக்கிறேன்... ம்....
"இசையை அருந்தும் சாதகப் பறவை... போல நானும் வாழ்கிறேன்" னு ஜானகிம்மா பாட்டு பாடியிருக்காங்க... அதன்வழி நிற்க, அவுங்க புள்ளைங்கள்ல நானும் ஒருத்தன் னு, நடந்த நிகழ்வுதான் சாட்சியம் னு உணர்ந்து என் மெய்சிலிர்த்த தினம் ....
செ. அங்குராசன்
12-02-2016