அண்ணன் ஒருவர் அவருக்குத் தெரிந்த ஆட்டோ ஓட்டுநர் தன் மகளை கல்லூரியில் சேர்க்கப்பட்டது தொடர்பாக ஒரு பதிவிட்டிருந்தார். அதில் சில கேள்விகளும் எழுப்பியிருந்தார்.
கேள்வி 1: வங்கிகள் கொடுக்கும் கல்விக்கடன் - மருத்துவம், பொறியியலுக்கு மட்டும் தானா? பி.காம் படிக்க கடன் கொடுக்க மாட்டாங்களா?
கேள்வி 2: பன்னிரண்டாம் வகுப்பில் 1144 மதிப்பெண் எடுத்த, ஒருவர் பி.காம் படிக்க எத்திராஜ், எஸ்.ஐ.டி போன்ற கல்லூரியை அணுகி, மனுச்செய்தும் இடம் கிடைக்கவில்லை. கூடவே அங்கெல்லாம் லட்ச ரூபாய் வரை செலவு ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். பி.காம் படிக்க அம்புட்டு ஆகிறதா?
கேள்வி 3. சுமார் பத்துக்கல்லூரிக்கும் மேலாகச் சென்று மனுச்செய்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் 250 தொடங்கி 500 வரை செலவு. சீட்டுதான் தரலையே மனுவுக்கு ஐம்பதோ, நூறோ செலவுக்கு எடுத்துகிட்டு, மீதம் பணமெல்லாம் கொடுக்க மாட்டாங்களா சார்ன்னு கேட்கிறார். இதை ஒழுங்கு செய்ய இயலதா? இறுதியில் மேற்கண்ட கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்திருக்கிறார்.
=*=*=*=*=*==*=*=*=*=*=*=**=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*==**=*=*=*=*==*=*
உண்மையில் இது யதார்த்தத்தின் வழி வெளி வந்த நியாயமான கேள்விகள். தொழிற்கல்வி படிப்புகளைப் போன்றே கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் சட்டப்படி, முறைப்படி கல்விக்கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் தரப்பட வேண்டும். ஆனால், பெருமளவுக்கு தரப்படுவதே கிடையாது. ஏன் என்பதையும் சொல்கிறேன். கல்விக்கடன் கேட்டு வருபவர்களுக்கு கடன் எளிதில் கிடைத்தே தீர வேண்டும் என சமீபத்தில் அனைவராலும் பேசப்பட்டு, அரசாங்கமும் இதனை வங்கிகளிடம் பேசி கட்டாயமாக்கி எளிதில் கிடைக்கும்படி சில கெடுபிடிகளையும் தளர்த்தி வழிசெய்தது போன்று பிம்பத்தை உண்டுபண்ணியது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டம் வாரியாக மண்டலம் வாரியாக ஒன்றியம் வாரியாக அனைத்து பெருவாரியான வங்கிகளும் கிளைகளை வைத்துள்ளன. இவர்களுக்கென்று ஒரு கணக்கிருக்கும். அந்தந்த பகுதிகளுக்குள் உட்பட்ட பயனாளிகளுக்கு மட்டும் இத்தனை எண்ணிக்கையில் கல்விக்கடன் முதற்கொண்டு இன்னென்ன கடன்கள் தரப்படவேண்டும் என வகுத்து வைத்துக்கொள்வர். வங்கியாளர்கள் அவர்களுக்கு ஏற்றார்போல் திறம்பட இதனை கையாள்வர். அதாவது கடனும் கொடுக்க வேண்டும், தமக்கும் பாதகம் இருக்கக்கூடாது. பாதகமா? இதுல பாதகம் எங்கே இருக்குனு தான கேக்குறீங்க. சொல்றேன்.
அதாவது, கடன் வாங்குறவங்களுக்கு வேறு எதாச்சும் அரசு மூலமா கல்வி உதவித்தொகை வருதா? என்று பார்ப்பார்கள். (இன்னிக்கு 20000 ரூவாய் தமிழக அரசாங்கம் பொறியியல் படிப்புக்கு அரசாங்க ஒதுக்கீட்டுல சேருற முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குனு கொடுக்குது. தேவப்படுற மிச்ச சொச்ச பணத்த கடன்ல கொடுத்துட்டா அதுவும் கணக்குல வந்துடும்னு இவுங்கள மாதிரி மாணவர்களுக்கும் எளிதா கடன் ஏற்பாடு செஞ்சு கொடுத்துருவாய்ங்க). மொத்தக்கடன் தொகையும் கம்மியா இருக்கும், எளிதா திருப்பி வாங்கிடலாம்ல. அதான்.
அப்றம் சொத்துப்பத்து பத்திரத்த வச்சுருந்தா அத பிணையமா வச்சு கொடுக்குறாய்ங்க. மாணவரோட அப்பா அம்மா பாதுகாப்பாளர்னு யாராச்சும் அரசு வேலைல இருந்தா உடனே கொடுத்துருவாங்க. மந்திரி அமைச்சர்னு யாரோட சிபாரிசு இருந்தா சிகப்பு கம்பளி வரவேற்பு தான். கூப்புட்டு கொடுப்பாய்ங்கள்.
ஆக இப்டி வங்கிக்காரனுக்கு எதுல அவனுக்கான பணம் திரும்ப வரதுக்கான 'ரிஸ்க் ஃபேக்டர்' குறைவோ அதுல கடனக்கொடுத்துட்டு கணக்கும் காமிச்சுருவான்.
இது எல்லாத்தையும் தாண்டி போராடிதான் இல்லாதவனுக்குலாம் இன்னிக்கு கல்விக்கடன்லாம் கிடைக்குது. வங்கிக்காரனையும் முழுசா குத்தம் சொல்லிட முடியாது. பெரும்பாலும் கல்விக்கடன்கள் எல்லாம் இன்னிக்கு வாராக்கடன்களா தான் இருக்காம். இத மையமா வச்சுத்தான் தற்போதைய நடுவணரசு ரிலையன்ஸ் போன்ற குண்டர்களை வீதியில் இறக்கி இல்லாதவங்களோட நிம்மதியையும் சேர்த்து கடன வசூலிக்கிறேன்ங்ற பேர்ல அராஜகம் செய்து கொண்டிருக்கிறது. அது வேற ட்ராக்கு கதை.
மேல சொன்ன கல்விக்கடன் எல்லாம் தொழிற்கல்வி படிக்குற கூட்டத்துக்கே முக்காவாசிக்கு மேல சரியாயிடும். அதுக்கப்புறம் ஆசிரியர் பயிற்சிக்கல்விக்கான கடன்கள் இருக்கும். இதெல்லாம் முடிஞ்சு வந்ததுக்கப்புறம் தான் கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் வந்துருக்கானே பாப்பாங்க. ஏன் என்ன காரணம்னு நீங்க தேட பாத்தாலும் முக்கியமான ஒரு காரணம் என்னன்னா தமிழ்நாட்டுல இருக்குற அனைத்து அரசுக்கல்லூரிகள் எல்லாத்துலையும் தற்போது இலவசமாகத்தான் படிப்பு வழங்கப்படுகிறது.
தனியார் கல்லூரியில், அதிலும் கலைக்கல்லூரியில் ஒரு பி.காம். படிப்பிற்கா ஒரு லட்சம் வரை செல்வாகும் ?
உண்மையில் எவ்வளவு வசூலித்தாலும் அதற்கென்று கட்டி செலவழிக்க ஒருத்தனிக்கூட்டமே இருக்கிறது. கேட்காட்டாலும் கொடுத்து சீட் வாங்கிவிடுவார்கள் அவர்கள். அது ஒருபுறமிருந்தாலும் இந்த பி.காம் படிப்பின் தேவைக்கான கிராக்கி அதிகரித்துள்ளது தான் காரணம். படித்ததும் ஏதோ ஒரு ஆடிட்டரிடம் உதவிக்கென்று சேர்ந்துக்கொண்டு நன்கு பழகியபின் தனியாக ஒரு ஆடிட்டராக வலம் வரலாம். மேலும் வங்கி வேலை வாய்ப்புகளில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பி.காம் படிப்பு அரசு கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு இல்லாததன் பொருட்டு இங்கு (அரசுக்கல்லூரிகளில்) தரமிழந்த ஒன்றாகவே இருக்கின்றது. இதனை தனியார் கல்லூரிகள் காசாக்கிக் கொள்கின்றன.
மதிப்பெண் வைத்து இடம் கொடுப்பதைவிட கையில் எவ்வளவு மதிப்பு பணம் வைத்திருக்கிறோம் என்பதை பார்த்தே கல்லூரியில் இடம் தருகிறார்கள். அரசு நிலையங்களிடமிருந்தே நியாயம் எதிர்பார்க்கமுடியாத நிலையில் நாம் இருக்கும் பொழுது தனியார் கல்வி நிறுவனங்களிடம் நாம் எதிர்பார்ப்பதென்பது நம் முட்டாள்த்தனமாகி போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கல்விதான் வர்த்தகமாகிவிட்டதே.
இவ்வளவுதான் வசூலிக்க வேண்டும் என்று அரசாங்கமும் விதி, நிதி விதித்து கிடுக்கிப்புடி சோதனையில் இறங்கியதாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையில் பணந்திண்ணும் முதலைகள் பெருகத்தானே செய்வார்கள். எஸ்.ஐ.டி காலேஜ்ல கட்டணம் அதிகம் தான். முறையான கல்விக்கட்டணங்கள் விதிக்கப்படாததன் காரணத்தினால் தான் இவர்கள் ஆட்டம் போடுகிறார்கள்.
எத்தனைக் கல்லூரிகளிலும் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் போது நாம் கட்டும் தொகைப்பணத்தை (250ரூவா முதல் 500ரூ வரையிலான) வாங்கும் போதே சொல்லிவிடுவார்கள், இந்தப்பணம் திரும்பத்தரப்படமாட்டாது என்று. அதற்கு மேல் வாங்கினாலும் பில் தரமாட்டார்கள். இவை யாவும் தான் முறைப்படுத்தப்பட வேண்டும்.
உரிய அரசு அதிகாரிகள் இதிலெல்லாம் தலையிட்டு அவர்களுக்கான பணியை துணிந்து செய்வார்களேயானால் கொஞ்சமாவது உருப்படும். அது கனவிலும் கூட நம் நாட்டில் நடக்காது என்பதும் தெரியும். எல்லாம் தலைவிதி என்று கையை விரித்துவிட்டு கிடைத்ததை வைத்து இன்பம் அடைந்து கொள்ள வேண்டியது தான்.
வேறு என்ன செய்ய?
ஏதோ எனக்கு பட்டத சொல்லிருக்கேன். உண்மையிலேயே இந்த மாதிரியான இடங்கள்ல அவசியமானவங்க யாருக்காச்சும் உதவ முடியும்னா அவுங்க யாருனே தெரியாட்டாலும், வழி காமிச்சு வைங்க. அவுங்க வாழ்க்கையில உங்கள எப்பவும் மறக்கமாட்டாங்க.
ஏன் சொல்றேனா, நானும் ஒருத்தர மறக்கமாட்டேன். எனக்கு வங்கியில கல்விக்கடன் கிடைக்க என் ரத்தம் சம்பந்தமில்லாத ஒருத்தர் எனக்காக பேசினார். அவரொன்னும் பெரிய அமைச்சரோ பண்ணையாரோ இல்லைங்க. சாதாரண கூலி வேலை செய்யுறவருதான், மறக்கமாட்டேன்.
கல்வி நிலையங்கள்ல மனிதம் போதிக்கப்பட்டிருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சு. மனிதம், கல்வி நிலையங்களை விட்டு சாலைக்கு வந்து பலகாலம் ஆயிடுச்சுங்க. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாதுனு சொல்லுறபடி ஒரு சில தனியார் கல்வி நிலையங்களாவது முன்வந்து நியாயத்தோடு செயல்பட்டா எப்டி இருக்கும். (படத்துல காமிக்கிற மாதிரி) நல்லாத்தான் இருக்கும்.
கல்விக்கடன் கொடுக்குறேன் பேர்ல, வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித்தராம, இளைஞர்கள் வாழ்க்கையில நல்லா கண்ணாமூச்சி ஆடுட்டு இருக்காங்க. கண்டிப்பாக ஒருநாள், உயர்கல்வி படிப்புகளனைத்தும் இலவசமாக்கப்பட வேண்டும்.
பொறுத்திருந்து பாருங்க.
நன்றி வணக்கம் .

