ஒரு பெண்ணின் சாவில் குளிர்காயும் எச்சைகள்!


சுவாதி என்றொரு தமிழ்ப்பெண் இரண்டுகால்கொண்ட நரமிருகத்தால் வெட்டப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் தாகத்திற்கு தண்ணீரும் உதவிக்காக ஒரு குரலையும் கரத்தையும் எதிர்பார்த்தும் கிடக்கையில் தமது நவதுவாரங்களையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதர்களாய் வீரத்தமிழினமாய் நின்றிருந்தீர் அன்று. அது பயத்தாலும் அதிர்ச்சியில் உறைந்துப்போனதாலும் உதவ, நடந்த கொடூரத்தை தடுக்க நீர் முன்னே செல்லவில்லை என்று சொன்னதைக்கூட‌ சகித்துக்கொள்ளாமல் இருக்கும் இடையிலேயே முகப்புத்தகத்தில் ஒரு பதிவு. ஒரு தமிழ்ப்பெண்ணின் சாவிலும் பாழும் சாதியைத் திணித்து சித்தரிக்கும் கேவலமான பதிவது. 



வெட்டியக்கயவன் முகம் அடையாளம் கண்டறியாத நிலையிருக்கும் வேளையிலும், விபச்சார‌ ஊடகங்களும் செத்துப்போனவள் 'தலித்' அல்லாத உயர்சாதி ஐயர் வீட்டுப்பெண் என்று செய்திகள் வெளியிட்டிருக்கும் வேளை ஒருபுறமிருக்க, நியாயம் கிடைக்க ஆதரவு தருகிறோம் எனும்பேரில் பா.ச.க்காரக் கட்சியினரும் அப்பெண்ணின் உறவினரை சந்தித்து நீலிக்கண்ணீர் வடிப்ப‌து ஒருபுறமிருக்க‌, "இதுவே ஒரு தலித் இனப்பெண் பாதிக்கப்பட்டிருந்தால் வந்து ஆதரவு சொல்வாயா?" எனக்கேட்கும் குள்ளநரிக்கூட்டம் மறுபக்கம். இதுவா நீங்கள் அரசியல் செய்யும் மேடை ??? நான் தெரியாமத்தான் கேட்கிறேன், எவனும் அவனவன் மக்களுக்குனு அநியாயம்னு நடந்தாதான் வாய்க்கிழிய பேசுவீங்களா?? குரல் கொடுப்பீங்களா? இப்படி சாவிலையும் அரசியல் செய்யும் கேவலமான கீழ்பிறவிகள் இருக்கும்வரை தமிழ்நாடு உருப்படவே உருப்படாது. செத்தவள் ஒரு தமிழச்சி இல்லையா? உண்மையான தமிழா நீ, காரி உமிழவேண்டாமா இவர்களது முகத்தில்.! 

கண்டிப்பாக நமது காவலர்கள் பிடித்துவிடுவார்கள் அந்த கொடூரக்கொலை செய்த கோளையை. என்ன செய்துவிடப்போகிறார்கள்??? அவனுக்கும் நாளை இஸட் பாதுகாப்புப்போட்டு நீதிமன்றத்திற்க்கும் காவல்வைப்பிற்க்கும் ராச மரியாதையோடு கூட்டிவந்து செல்வார்கள். இந்திய பெரும் அரசியல் சட்டத்தின்முன் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று வாய்சடால் பேசும் பிணந்தின்னிகளும் பணம்பார்க்கும் வேலையில் இறங்கும். விளைவு, கொலையாளி மனநிலைப்பாதிப்பில் இருந்ததாலே கொலை செய்துவிட்டார் என்றும், சட்டப்படி இது கொலையே ஆகாது என்றும் வாதாட ஒரு அணியும் நாளை வரும். இப்போது வாய்ப்பொத்தி மூடிக்கொண்டிருக்கும் மாதர்சங்கமும் அப்போது திடீர்விஜயமாய் போர்க்கொடி தூக்கும், அதுவும் அரசியலுக்காகத்தான். போங்கடா உங்கள் அரசியலும் சட்டங்களும். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான், தவறுகளை குறைக்க முடியும். இங்கு அரபுநாட்டுச்சட்டம் மட்டுமே தேவை!

வெட்டியவனைப் பிடித்து நடுசாலையில் வைத்து அவனது உணர்ச்சியெழும் நடுநரம்பை வெட்டி எறிய அரசாங்கம் முன்வந்து சட்டமும் இயற்றிடமுன் வரவேண்டும். முடியாவிட்டால், எத்தனையோ என்கொயர் என்கவுண்டர் என்ற பெயரில் பல அப்பாவிகளைக் கொலைசெய்ததை போன்று, நல்லதீர்ப்பிற்காக இந்த சைக்கோ கொலையாளியை ஓடவிட்டு போட்டுத்தள்ள வேண்டும். முடியுமா உங்களால்??? கழிசடைகள் அல்லவா, அதற்கெல்லாம் திராணியும் கிடையாது அதோடு இவர்களுக்கு அவசியமும் கிடையாது. கருமமடா. எந்தமாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றே தெரியவில்லை.

மாதர் தம்மை இழிவு செய்திடும் மடமை ஒழிந்திடல் வேண்டும் என்று அன்றே முண்டாசுக்கட்டியவன் சொல்லிச்சென்றான். இன்று அவனிருந்திருந்தால் வெட்டியக்கையினையும் இதனை அரசியல்செய்யும் வாய்களையும் தீயீட்டியினால் பொசிக்கியிருப்பான். பாடியுமிருப்பான் "எம்குல தமிழ்ப்பெண்ணின் சாவில் உதிரங்குடிக்கும் எச்சை நீயா தமிழன்?" என்று. 

நெஞ்சுப்பொறுக்குதில்லையே, இந்த நிலைக்கெட்ட மனிதர்களை நினைத்துவிட்டால் நெஞ்சுப்பொறுக்குதில்லையே. 

27-06-2016

வற்றா நதி...

வற்றா நதி...

அகநாழிகை பதிப்பகம் வெளியீட்டில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் படைப்பில் உருவான 'வற்றா நதி'...
உண்மையில் வற்றா நதி ஒரு ஜீவ நதி! <3



திருநெல்வேலி தூத்துக்குடி இடையே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றை சுற்றி நடந்த நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களைப்பற்றி அழகாய் தனக்கே உரித்தான எழுத்துக்களில் அம்புலி மாமாவின் பேரன் என்று சொல்லுமளவிற்கு மிஞ்சா வகையில் கைத்தேர்ந்த 'கதை சொல்லி'யாக தன்னைப் பரிணமித்திருக்கிறார், எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி​.

ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க உட்கார்ந்தால், வாசிக்கும் வாசகனின் கண்களையும் கைகளையும் வேறு வினைகளிலே கட்டுற செய்யாது புத்தகமுழுதையும் படித்துமுடித்து விடும்படியாய் உணரச் செய்ய வேண்டும். அது முழுக்க முழுக்க புத்தகத்தில் எழுத்தாளன் பிரயோகிக்கும் உணர்வுள்ள எழுத்துக்களால் அன்றி வேறால் அமையா. இவ்விலக்கணத்திற்கு சற்றும் சோடைப் போகாது சலசலத்து அழகாய் வீறுகொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது இந்த 'வற்றா நதி'.

இந்த வற்றா நதியில் குளித்து, களிப்புற்று,  சிற்சமயங்களில் கண்நீர் சிந்தி, வியந்து, கொண்டாடி, உறவாடி, பல கதாப்பாத்திரங்களோடு வாழ்ந்து, பயணித்த பேரானந்தமான திருப்தியை என்னால் உணரமுடிந்தது.

நதியானது தான்செல்லும் இடம் நல்லதோ கெட்டதோ வழியெங்கிலும் சிறுசிறு கிளைகளை உண்டுபண்ணி செல்வதோடு கடைசியில் நீலக்கடலில் சங்கமிக்கும். அவ்வழியிலேயே இந்த 'வற்றா நதி'யின் உள்ளே செல்ல செல்ல நிறைய கிளைகளுமுண்டு. அதில் செழுமைகளும் வளமைகளும் வனப்புடன் இருக்கும். வலிகளும் வேதனைகளும் ஏக்கங்களும் இறுக்கத்துடன் நிறைந்திருக்கும்.

அநேக இடங்களில் கிராமிய மணம்வீசும் பேச்சுவழக்கினை அச்சுப்பிசகாது உணர்வுகளை உள்ளது உள்ளபடியே எழுத்தில் தருவதென்பது அவ்வளவு எளிதல்ல. எழுத்தாளர் இதில் தன்பங்கை கச்சிதமாய் அப்படியே படைத்துள்ளார்.

தென்னை விவசாயியின் வேளாண் உழைப்பையும், அதன் செவ்விக்காக‌ அவர் மேற்கொள்ளும் சிரத்தையையும், ஆடு கோழி வளர்ப்பையும் சொல்லுவதோடு, காலத்தின் சாபத்தால் அவையாவும் கைவிட்டு போனபின்பு, அதே விவசாயியின் மனத்தில் உண்டாகும் அதிர்வலைகளையும் திறம்படவே காட்டியுள்ளார் நம் எழுத்தாளர். அதில் விவசாயியின் இறப்பைக் காட்டியதோடு, அவர்மகன் பின்வைத்து வளர்ந்த தென்னம்பிள்ளையின் மீதுசாய்கையில் தந்தை விவசாயியினுடைய ஸ்பரிசத்தை மக‌ன் உணர்வதாய்க் கூறும் அழகு இருக்கிறதே அலாதிதான்.

இருவிளம்பருவ இருபாலர்களுக் கிடையேயுள்ள பக்குவமான முதிர்காதலை சொல்லுகையில் கிளுகிளுப்பையும், கரிசல் புழுதியில் பிறந்து கைதேர்ந்த விமானஓட்டியாகும் லட்சியத்தை அடைந்தும் சந்திக்கும் தோல்வியாய் முடியும் பேராபத்தை சொல்லுகையில் பரிதாபத்தையும் உண்டுபண்ணும் எழுத்துக்கள், ஒரு இடத்தில் குடுப்பினையென்றால் சொந்தமண்ணில் வாழ்வதையும் அங்குள்ள மனிதர்களையும் நேசிக்கும் பேறேயாகும் என்று அழகுபட ஏக்கத்துடன் சொல்லி பயணிக்கிறது.

நான் ரசித்த ரம்மியமான பகுதியென்னவெனில் 'காற்றிலிடைத் தூறலாக'யில் நாயகன், கோவை ஆனைகட்டிக்கு இருபது கி.மீ தொலைவில் கேரள எல்லைக்குள் இருக்கும் நண்பனின் ஊருக்கு மேற்கொள்ளும் இருநாள் மகிழ்சுற்றுலா. இப்பகுதியினை படிக்கும் வேளையிலேயே மலைச்சாரல் நம்மைத் தீண்டி செல்லும். நாமும் சேர்ந்து களித்துப் பயணித்ததொரு உணர்வு வாசிப்பவரை ஆட்கொள்ளும் என்பதில் துளியிலும் ஐயமில்லை.

மாட்டுவண்டியக் கட்டிக்கிட்டு அதிலே தாய்மாமன்மார், அத்தைமார், பெரியப்பன்கள், சின்னப்பன்கள், பெரியம்மாள்கள், சின்னம்மாள்கள், அக்காள்கள், அண்ணன்கள், தங்கைகள், தம்பிகளோடு பொடிசுகளும் எல்லாரும் சேர்ந்து பங்குனித் திருவிழாவிற்காக குலதெய்வ வழிபாட்டிற்காக செல்லும் அழகினையும், போகிறப்போக்கில் பாட்டியம்மாள் பாடும் பாட்டு, அதைக்கேட்டு தூங்கிவிடும் பொடிசுகளும், வண்டியினை வழிநெறிப்படுத்தும் பெரியவர்களும் என அவர்களோடு வாசிக்கும் நானும் அழகாய் பயணிக்கலானேன்.

அந்தப் பாம்படக்கிழ‌வி ஒற்றைக்கையில் பத்து பேரப்புள்ளைகளையும் தரதரவென இழுத்து சாமி பாரு சாமி பாரு என சத்தம் போட்டுக்கொண்டே ஓங்கி நிற்கும் பூடத்தைப் பார்த்து கைத் தூக்கிக் கும்பிட்டு முணுமுணுக்கும்போது முச்சூடா அது கண்ணு கலங்கி நிக்கிறத சொல்லுற எழுத்துக்களைப் படிக்கிறப்போவே, என் அப்பத்தாளின் நியாபகம் தலைக்கேறி என்கண்களும் நீரை வார்த்திருந்தன‌.

அத்தோடு நிக்காம, முன்பெல்லாம் கரையில் செரட்டியை வைத்துத் தோண்டினாலே ஊத்துத்தண்ணி பொங்கிவரும். இப்போ மண்ண எல்லாம் அள்ளி அள்ளி நீர்மட்டமும் கீழேப் போய்விட்டது. முன்பெல்லாம் பேரப்பிள்ளைகள் எல்லா சொந்த சுறுத்துகளுடன் வாழ்ந்திருந்தனர். இப்போ உள்ள பேரப்பிள்ளைகள் சின்னப்பன் பெரியப்பன் உறவெல்லாம் என்னவென்று கேட்கும் அளவிற்கு வாழ்க்கைபோய் கொண்டிருக்கிறது என்பதை சொல்லி மனத்திலே கனமேற்றுகிறார் நம் எழுத்தாளர்.

அதிலும் அவர்மட்டும் மாறாததை "அந்த நெலா மாறிருக்காவோய். இல்ல மாறிருக்கான்னு கேக்கேன். பின்ன நான் மட்டும் என்ன மசுத்துக்கு மாறனுங்கேன்" என்று சொல்லும் இடத்தில் நம்மனத்தை கொள்ளையடிக்கிறார். இதனை உணர்ந்து படிப்பவர்களின் மனத்தில் ஏதோ ஒன்றை நறுக்கென்று உணர்த்திவிட்டுத்தான் போகும் நிச்சயமாக!

தொடர்ந்து பயணித்து வரும்வழியில், உறவுகளில் தலையாய உறவின் முறையற்ற உறவினால் மனமுடைந்த உறவால் தலையாய உறவும் தலையாரியும் வெட்டிக்கொலையுண்டாக்கிய இரத்தக்காட்சிகளும் எழுத்தில் எளிதாய் பிரதிபலித்தன. அதன்பின் பேராச்சிக் கதைகள் சொல்லும் பெரியக் கிழவியும் நம்மை சற்றுநேரம் கூடவே ஆக்கிரமித்துக்கொள்வாள்.

கூடன்குளம் அண்மின்நிலையம், விஜயநகரிய அணுமின்நிலையத்தில் எரியூட்டப்படுகின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் ஒரு ஊரே சந்திக்கப்போகின்ற சொல்லவொவ்வா பிரச்சினைகள், கருவிலேயே சிசுக்களின் உருக்கலைப்பு, கருவே அழியும் அபாயநிலை ஏற்பட்டது நம்மைப்போன்ற தூங்கிபோனவர்களால்தான், இனியாவது தூங்காமல் இருந்து கொலைகளைத் தடுப்போம் என்கையில் எழுத்தாளரின் சமுதாயத்தின் மீதான அக்கறையும் துடிப்பும் 'பளிச்'.

மரகதம் பெரியாச்சியின் வீட்டுநிலைக்கதவைப் பற்றியும் அக்கதவின் இரும்புப் பூண் கொக்கியைப்பற்றியும் பெரியாச்சி காட்டிய அன்பைப்பற்றியும் முன்பொரு காலத்தில் அங்கு நடந்தநிகழ்வுகளையும் கூறிவிட்டு, பின்னர் ஒருகாலத்தில் அப்பேர்பட்ட வீடானது சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விடப்பட்டிருந்ததை சொல்லும் பொழுதும், அந்தவீட்டினுள் நுழைந்து செல்கையில் மேல்மதிலில் தன் தலை இடித்துக்கொண்ட பொழுது "இப்போது மட்டும் தடவி விட பெரியாச்சி இருந்தால் எப்படி இருக்கும்" எனச் சொல்லும் பொழுதும் என்மனம் கசிந்தது.

அப்படியே போகிறப்போக்கில் வற்றா நதியில் பயணித்து இருக்கும் பொழுது ஒரு இடத்தில் உரையாடல் ஒன்று 'டீயும் தம்முமாக பேசிட்டு இருந்தோம்' என்று வருகிறது. அந்த இடத்தில் நம் எழுத்து ஆளர், அடைப்பிக்குறிக்குள் "புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு" என்று எழுதியிருந்தது, உண்மையில் வாசிக்கும் வாசகனின் எதிர்பார்ப்புகளை ஒளி‍~ஒலி அளவிலும் மிஞ்சிவிடும் போலுண்டு. அருமை!

இப்படி அவர்வாழ்ந்த மண்ணைச் சுற்றியே நடந்தப்பல நிகழ்வுகளை நல்ல ஒரு எழுத்தாளராய் எழுதி நிரூபித்திருக்கிறார். இவரது படைப்பு நூறு பக்கங்களையேக் கொண்டிருந்தாலும் அதனுள்ளேயே இவ்வளவையும் மாணிக்கமாய் தரவியலும் என்பதையும் நிதர்சனமாக்கி யிருக்கிறார்.

அகநாழிகை பதிப்பகம் வெளியீட்டில் எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் படைப்பில் உருவான 'வற்றா நதி'...
உண்மையில் வற்றா நதி ஒரு ஜீவ நதி! <3

இன்னும் நிறைய நூல்கள் எழுதிட எழுத்தாளருக்கு எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக எழுத்தாளரின் எழுத்துக்கள் விருதுகளுக்கு சொந்தமாகும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன், <3
செ. அங்குராசன்
26‍.06.2016

சும்மா நெத்தியடி.. லவ் யூ ஔவைப்பாட்டிமா ..

சும்மா நெத்தியடி.. லவ் யூ ஔவைப்பாட்டிமா .. <3

நன்றி: தமிழ்க்காதலன்​
 ·
ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.
அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.
ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.
கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:
"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"
தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.
"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.
அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:
பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு
என்பதாகும் அவ்வரிகள்.
இதையும் சேர்த்து முழுப்பாடலாக,
"தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொற் சிலம்பே சிலம்பு "
என்பதாகும்.
ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,
"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"
என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,
"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்க்
கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது."



தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.
எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பரி எருமை. எமனேறும் பரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.
"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

என்மேல் அதீத நம்பிக்கையுண்டு...

என் அடித்தளமனத்தின் எண்ணங்களின்  ஓட்டமே இந்தப்பதிவு. இது நெடியப் பதிவுதான். இருந்தாலும் எழுத விரும்புகிறேன். 



அது எனது பள்ளிப்பருவம். முழுமன நிறைவுடன் நான் பயணித்தப் பொற்காலம் என்றே சொல்லவேண்டும். எல்லா ஆசிரியர்களுக்கும் நான்தான் செல்லப்பிள்ளை. இன்னும் சொல்லப்போனால் பள்ளியில் தொடங்கி கல்லூரி வரையிலும் பயின்ற நான்கு கல்வி நிலையங்களிலும் நான்தான் வகுப்பில் 'லீடர்'. அந்தளவுக்கு நம்ம‌ மூஞ்சிக்கு பின்னால பெரியதா ஒளிவட்டம் சுத்துறது தெரிஞ்சுருக்கும் போலிருக்கு.

Sheeba Joseph Rajan Babu​ பென்னி மிஸ், ஜோசப் ஐயா, ராணி டீச்சர், வேதமணி டீச்சர், வசந்தா டீச்சர், ஹெலன் டீச்சர், ஜெயக்குமாரி அம்மா, பேராயர் ஜெயக்குமார் ஐயா இவர்கள்தான் எனது எழுத்தறிவு, மொழியறிவுக்கு அடித்தளமிட்டவர்கள். இன்றுவரையிலும் அன்பால் என்னை கண்கலங்க‌வைத்தவர்கள்.

தமிழாசிரியர்கள் அபிராமி மிஸ், பேபிராணி டீச்சர், மணிமேகலை அம்மா, பாலு ஐயா, நல்லாசிரியர் மாயழகு ஐயா, Karthikeyan​ இவர்களின் பெரும்பணி வெறும் வார்த்தைகளில் அடங்காது. அப்போதெல்லாம் நாள்தோறும் என்னை மேடையில் தமிழில் செய்திகள் வாசிக்கச் செய்வது, திருக்குறள் சொல்லி சிந்தனைப்பொருள் சொல்லுவது, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி‍வினா, பாட்டு ஒப்புவித்தல் போட்டி, மாணாக்கர் இலக்கிய மன்றம், கம்பன் கழகம், அறிவியல் கழகம் என முழுதாய் என்னை அவற்றுள் ஈடுபடுத்தி ஊக்கப்படுத்தினார்கள். 

மேல்நிலைப்பள்ளி மாற்றலுக்குப்பின் தமிழாசிரியை நளினி மிஸ் அவர்கள் பாடம் எடுக்கும் விதம், செய்யுள் பொருள் விளக்கும் பாங்கு சற்றே வித்தியாசமானதாய் இருந்தது. பாடத்திட்டத்தை தவிர்த்து பற்பல தமிழ் இலக்கிய, உரைநடை, சிறுகதை, அறிவியல் சார்ந்தவற்றில் எங்களை ஆய்வுப்பணி மேற்கொள்ளச் செய்து அதுபற்றி விளக்கக்கட்டுரையும் எழுதிவரச் சொல்லுவார். அவையனைத்துமே நெஞ்சால் மறக்க இயலாத பசுமையான காட்சிகள் பலவற்றை கொண்டது.

சமீபத்தில் எனது பள்ளி தோழர் தோழிகளிடம் அலைப்பேசியில் பலவருடங்கள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது பழைய நினைவுகள் அனைத்தையும் நினைவு கூர்ந்தார்கள். தோழி ஒருவர் பள்ளிக்கு சென்று தமிழாசிரியரை பார்த்து நலம் விசாரித்திருந்த வேளையில், என்னைப்பற்றி பத்து அண்டுகள் கழித்தும் ஆசிரியர் நினைவு வைத்து வினவியிருக்கிறார்கள். இதனை கேட்கும்பொழுது நன்றியுணர்வால் என் ரோமங்கள் மெய்சிலிர்க்கலானேன். 

இனிவரும்காலங்களில் என் ஆசிரியப் பெருமக்க‌ ளனைவரையும் எனது பயணத்தில் மீண்டும் ஏதோஒரு வகையில் ஒன்றுசேர்த்து அவர்களின் வழிகாட்டுதற்படி நடந்திட விழைகிறேன். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.

எனது குடும்ப பின்புலம் சற்று ஏழ்மையானது. பல போராட்டங்களுக்கு பின்னர், கல்லூரியில் மின்னியல் பொறியியல் துறையில் சேர்ந்துப்படித்தேன். படிப்பிலும் கெட்டி எனும் சொல்லும் அளவிற்கு அண்ணா பல்கலைக்கழக அளவில் நான்காவது தரம், தங்கப் பதக்கம், பண ரொக்கம், பாராட்டும் கிடைத்தது. சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளாய் தனியார் துறையில் பொறியாளராய் வேலை. வாங்கும் சம்பளமும் தம்பிகள் மேற்படிப்பு, சொந்தக் கடன், நண்பர்களிடம் கடன் வாங்குவதும் அடைப்பதும் என இவற்றிற்கே ஆகச் சரியாயிருக்கும். சொந்தமாக வீடு, மனை கட்ட வாங்க கனவுகளும் உண்டு. கனவுகள் ஆடம்பர நோக்கோடு அல்ல, அவசியத் தேவைக்காக மட்டும் தான். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.

நானும் அவ்வப்போது இந்த ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் நினைப்பதுண்டு. தொடர்ந்து பல தமிழ் நூல்கள் படிக்க வேண்டும். தொடர்ந்து கதைகளில் பற்பல கதாப்பாத்திரங்களோடு பயணிக்கவேண்டும். தொடர்ந்து கவிதைகள் படித்து ரசிக்கவேண்டும். தொடர்ந்து தமிழின் இனிமையை உணர்ந்தே என்காலம் நகரவேண்டும். என்னசெய்வது! பல சூழலின் காரணத்தினால் எந்திர உலகத்தின் பிடியில் கட்டுற்றதுபோல காற்றுவீசும் போக்கில் போகும் படகாய், தமிழை தாய்மொழியாக கொண்டும் தமிழ்பேச கூசும் மக்களிடையே பயணிக்க‌ ஆளாயினேன். நினைத்துப் பார்க்கையிலே பெருமூச்சொன்று வந்துவென் வலியினை நொடிப்பொழுது இறக்கிவிட்டு செல்லும். அவ்வப்போது மேற்கொள்ளும் நெடும் ரயில்பயணங்களில் கிடைக்கின்ற நாவல்களோடு பயணிக்கும் பேறும் கிடைக்கும். அதனுடைய தாக்கம் சிலநாட்கள் அலுவலகம் வரையிலும் இருக்கும். இப்படி நேற்றைக்குப் பெய்தமழைக்கு வளரும் காளான் என்றல்லாமல், விழுதுபல விட்டு அதையே வேராக்கி இன்னொரு மரமாகும் பெரும் ஆலமரம் போன்று, நல்ல நூல்கள்பலவகை ஒன்றுமுடிய மற்றுஒன்றாய் தொடர்ந்து படித்திடும் வாசகனாகும் கனவு பலித்தலும் வேண்டும். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.

நாள்தோறும் நாம் சந்திக்கின்ற மனிதர்கள் ஏதேனும் ஒருவகையில் நம்மைச் சிந்திக்க செய்வதுண்டு. சந்திக்கின்ற மனிதர்களில் மனதால் நல்லவர்களும் இருக்கலாம் கெட்டவர்களும் இருக்கலாம். அவர்களை நம்மால் கண்டதும் மதிப்பீடு செய்வது என்பது கடினம்தான். பழகிப்பார்த்தால் தான்தெரியும். அவரின் பண்பென்ன பாடென்ன என்றும்புரியும். இதோடு நமது இயல்புகளும் ஒத்துநிற்க‌ சேர்ந்தே மலர்வதுதான் தூய‌நட்பு. அப்படிதான் என்னைப்பொறுத்த வரையில் Anburaja​, Loveson​, Guna​, Sutha​, Vengatesh​, Rethina​, Mahathir​, அஜீஸாக்கா, Aysha​, Karthik​, Thowfiq​, Noor​, Praveen​, Faisu​, Velan​, Bala​, Nantha​, Jameer​, Arul​, Shibani​, Inigo​, Suresh​, Selvin​anna, கிருஷ்ணா, Dhana, Raj​, Krishnakumar​, Harish​, Ramshankar​, பிரியா, கவிமணி​, தாசன்​, Kesavaraj​, கார்த்திக் புகழேந்தி​, கவி இளவல்​, Vadivarasu​, Ramesh​anna இன்னும் நிறையப் பேர் தங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒருவகையில் என்மனத்தில் நீக்கமற நிறைஞ்சுருக்காங்க. எத்தனை கருத்து வேறுபாடு வரினும் ஒருநல்ல புரிதல் ஒன்றுமட்டுமே கொண்ட நட்பினை வழிநடத்தும். பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.

என் வாழ்க்கையில் இப்பதிவில் வரும் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ நல்ல‌ பலமாற்றங்களை என்னில் உண்டாக்கியவர்களே!

பார்க்கலாம் காலம் நல்ல வழிவகை செய்யும் என்ற நம்பிக்கையுண்டு. அதைவிட என்மேல் அதீத நம்பிக்கையுண்டு.
அன்புடன் 
செ.அங்குராசன் :) 
17‍.06.௨016

ஜெயராம் - வாருங்கள் நண்பர்களே வாழ்த்தலாம்.

வாருங்கள் நண்பர்களே வாழ்த்தலாம்.

ஜெயராம்.. :)

பரபரப்புமிக்க இவ்வையகத்தின் வானுலகில் வளிமண்டலத்தினூடே காற்றைக் கிழித்து பறந்து உலா வருகின்ற பற்பல பறவைகளுக்கு மத்தியில் வானொலி அலைக்கற்றைகளின் சமிக்ஞைகளாகப் பயணித்து நம் இருசெவிகளின் வழியாய் நல்லபடியானக் கருத்துக்களைச் சுமந்துவந்து உள்ளிறங்கி இதயத்தில் வேரூன்றும்படி சொல்லி மனதிற்க்கு பேரானந்தத்தை ஏற்படுத்தும் மென்மையான அதே நேரத்தில் கனத்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

மக்கள் மதிக்கின்ற வகையில் எனக்குத்தெரிந்த நன்கறிந்த  எளிமையானவர்களில் அண்ணனுக்கு முக்கிய இடமுண்டு. தன் இனிய வசீகரக்குரலினால் பல லட்சக்கணக்கான ரசிகர்களைத் தனக்கென உருவாக்கி, அவர்களது இதயங்களில் அன்பால் அசைக்கமுடியா சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளவர்.

அதற்க்கு சான்றாக, 9 ஆண்டுகளாய் தொடர்ந்து வெற்றிகரமாய் ஒலிபரப்பப்படும் இவரது வானொலி நிகழ்ச்சியான 'ஆத்திச்சூடி'... ஹலோ பண்பலையின் முதல் குரல் என்பது கூடுதல் சிறப்பு.

9 ஆண்டுகளாய் ஒரு நிகழ்ச்சி, அதிலும் அதே ஆள், இன்னும் வெற்றியோடு என்றால்.. சாதாரணமாக நிகழ்ந்துவிடுமா என்ன இத்தகைய சாதனைகள் எல்லாம்...
தான்செயும் பணியினை செவ்வெனவே அரும்பணியாய் தலைமேற்கொண்டு அதிலே இப்படி செய்தாலென்ன அப்படி செய்தாலென்ன என்றெண்ணி நாளும் புதுமைகளைத் திறம்படத் திணித்து தன் ரசிக நேயர்களுக்கு நிகழ்ச்சியாகத் தருவதனால், இது சாத்தியமாயிற்று.

பல சாதனையாளர்களின் பாதையைப்போன்றே இவர் கடந்துவந்தப் பாதைகளும் தன்னகத்தே சற்று நிறையவே சவால்களையும் சோதனைகளையும் போட்டிகளையும் கொண்டது. அவையனைத்தையும் இன்முகமுடன் அரவணைத்து செயலில் வெற்றிகாட்டி இன்றுவரையில் வாகைசூடியாகவும் முடிசூடா மன்னனாகவும் இத்துறையில் வலம்வருகிறார் என்றால் அது மிகையாகாது.

படிப்பென்று வருகையில் முதுகலையில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவராவார். ஒருமுறை சென்னைக்கு இந்திய ஆட்சிப்பணித் தேர்வெழுத வந்திருக்கையில், ஊடகங்களில் தன் திறமையைக் காண்பிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அப்போது அவரே அறிந்திருக்கமாட்டார் இன்றைய உயர்ந்த நிலையை அவர் அடைவாறென்று.

ஆம், அகில இந்திய வானொலியில் செய்திவாசிக்கும் பிரிவு பின்னர், தூர்தர்சன் தொலைக்காட்சியிலும் முன்னணி செய்தி வாசிப்பாளரான திருமதி. சோபனா ரவி உட்பட பலரோடு இணைந்து சுமார் 2 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராய்ப் பணியாற்றியிருக்கிறார்.

எதைச் செய்தாலும் அதைத் தெளிவுப்படச் செய்ய விரும்புவார். ஆதலால் தானோ என்னவோ, இவரது ஒவ்வொரு முயற்ச்சிக்கும் பரிசாய், நம் தமிழ்த்தாய் தன் அகமகிழ்ந்து வாகை மலரை அவருக்குச் சூடிச்சூடி அழகுப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் போலும்!

நல்லது நடக்கும்! நல்லது மட்டுமே நடக்கும்! எனும் நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை நாளும் நமக்குச் சொல்லி மனதைரியத்தை ஏற்படுத்த முற்படுபவர். இவர் செய்யுள் சொல்லி அதற்க்கு பொருள் கூறும் நயம் இருக்கிறதே, அடஅட.யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பேசலாம் எழுதலாம். ஆனால் சொல்பவர் சொன்னால் அதையும் சொல்லும் விதம் பார்த்துச் சொன்னால் கிடைக்கும் பயனோ கோடி. ஆக, இலக்கியக் காதலனை இலக்கியக் கிறுக்கனாய் மாற்றும் வல்லமை இவரது குரலுக்கும் அதை சொல்லும் தொனிக்கும் உண்டு.

அண்ணனுக்கு இசையிலும் நாட்டம் அதிகம். வீணை வாசிப்பில் கைத்தேர்ந்தவராய் வலம்வர நாட்களும் வெகுதூரம் இல்லை.

ஒன்று நினைவிற்க்கு வருகின்றது. அண்ணன் சொல்லியிருந்தார். ஒரு ரசிக சகோதரி இவரது நிகழ்ச்சியில் இவரளிக்கும் இத்தகைய விளக்கங்களை எல்லாம் குறித்து வைத்து இருந்து, அதனை ஒரு புத்தகம்போலாக்கி, பரிசளித்தாராம் அண்ணனுக்கு. தன்னகத்தே பொருள்பலப் பொதிந்து மாணிக்கமான வாசகங்களைக் கொண்டிருக்கும் திருவாசகமும் அதற்க்கு அவர்தந்த தெளிவுரையும் அது. இன்னும் நிறைய இதுபோல பல இனிக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம். எழுதினால் பல இணைப்புகள் கொண்ட இரயில்பெட்டிகளைப்போல் நீண்டுப்போகும். அவ்வளவு உண்டு.

அண்ணா, இதுபோல நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணக்கம் சொல்கிறேன். தங்கள் வீட்டிற்க்கு நான் வந்திருந்தபோது அப்பா, அம்மா, அண்ணி, தம்பி கிருஷ்ணா ஆகியோர் எனக்கு செய்த அன்பினை நான் எந்நாளும் மறக்கமுடியாது.

தங்கள் வீட்டிற்க்கு கிருஷ்ணாவிற்க்கு அடுத்ததாக வந்திருக்ககூடிய குட்டிப்பாப்பா 'இராஜமாதங்கி'யைக் காண பெரும் ஆவல் பூண்டுள்ளேன். விரைவில் வந்து சந்திப்பேன் என நம்புகிறேன்.

வருடந்தோறும் இதுபோன்று வாழ்த்துச்செய்திகளை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என்று உளமாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு, இன்னொருமுறை தங்களுக்கு வாழ்த்துச் சொல்லிக்கொள்கிறேன்.

என் ஜெயராம் அண்ணனுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள். :D

உற்றத் தோழனாய், உங்கள் அரும் தம்பியாய்,
செ. அங்கு இராசன் :)
12.06.௨016

மனிதம் வளரட்டும்!

சில தினங்களுக்கு முன்பாக மாநகர் பேருந்துகளில் ஆடவர்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍~ மகளிருக்கான ஒதுக்கப்பட்ட இருக்கைகளும், அதில் நடக்கும் சில நிகழ்வுகளையும் பட்டியலிட்டு ஓர் ஆதங்கப்பதிவு இட்டிருந்தேன். அதற்கான மறுமலர்ச்சியாக ஓர் நிகழ்வு அதே எண்ணிட்ட பேருந்தில் நடந்தேறியது, நேற்றைக்கு மாலையில். இதோ அவையாவும் உங்களின் கண்ணோட்டத்தின் முன்னால்....

***


45A பேருந்து. நேற்றைக்கு மாலையில், வழக்கம்போல் அலுவல்பணி முடித்துவிட்டு இராயப்பேட்டையில் பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஆங்கு முழுதுமே தலைகளாக நிரம்பி வழிந்தப்போதிலும், கடைசி வரிசை மகளிருக்கான இருக்கைகள் யாவுமே காற்று வாங்கியப்படி ஏங்குவது போலிருந்த ஒரே காரணத்தாலோ என்னவோ அங்குப்போய் சன்னலின் ஓரமாய் ஒரு இளைஞன் அமருகையில், அவன‌ருகே பழுத்த ஒரு முதியவரும் அமர்ந்துக்கொண்டார்.

பேருந்து சில நிறுத்தங்களைக் கடக்கக் கடக்க, மொதுமொதுவென மக்கள் கூட்டத்தால் நிரம்பியது, அப்பேருந்து. எங்கே நம்மள இருக்கைய விட்டு எழுந்திருக்க சொல்லிடுவாங்களோ என்னவோ என்று எண்ணினானோ என்னவோ என நினைக்கும் வகையில், அந்த இளைஞனும் படக்கென்று இரு கண்களையும் மூடி, தோள்ப்பையை மடியில் வைத்து அதைக்கட்டிக் கொண்டும் சாய்ந்து படுத்துக்கொண்டான்.

ஆக எவ‌ரும் அவனிடம் சென்று கேட்கப்போவதுமில்லை. அதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், அருகில் முதியவர் இருந்ததனால் அவரையும் யாரும் எழுந்திருக்கக் கேட்கப்போவதில்லை. அவ்வளவு இஸட் பாதுகாப்புப் போடப்பட்ட இடம் போல் நினைத்துக்கொண்டான், அந்த இளைஞன்.

சிறிது நேரத்தில் பேருந்தும் சைதாப்பேட்டையை அடைந்தது. சிகப்பு நிறத்தில் சிகைச்சாயம் தலையில் பூசியது போன்று செம்பட்டைத் தலைமுடியுடன், மூக்குக்கண்ணாடியும் சிடிதாரும் அணிந்த ஒரு நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், பேருந்தின் கடைசி இருக்கை வரிசையை நோக்கி நடந்தார். அங்கு சென்று அந்த இளைஞனின் கையை அப்பெண்மணி சுரண்ட, எதையோ மனதில் முடிவு செய்தபடி இருக்கையில் இருக்கையிலே அவன் குனிந்திருந்த தலை நிமிர்ந்து நோக்க.

செம்பட்டைத் தலைப்பெண்மணி : "இது லேடீஸ் சீட்டு. நான் உட்காரணும், எழுந்திருங்க"

அவன் : "எனக்கு மயக்கம் வந்தப்படி இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்கங்க. கொஞ்ச நேரம் கழிச்சு எந்திரிச்சுடுவேன்" என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டான்.

செ. பெண் : "கண்டக்டர் சார், அவரை எழுந்திருக்க சொல்லுங்க. நான் சொல்லியும் எழமாட்டிறாரு" என இரண்டு முறை பேருந்து நடத்துநரிடம் முறையிட்டார், அப்பெண்மணி.

(அவன் நடத்துநரைப் பார்த்து, செய்கையில் இதோ எழுந்துவிடுவதுபோல் பதிலளித்தான். இதன் பின்னர் என்ன நடந்திருக்கும்? எதாச்சும் கற்பனை செய்ய முடிகிறதா?)

நடத்துநர் : "ஏம்மா, முன்னாடி இருக்குற ஜென்ஸ் சீட்டுங்கள்ல பாருங்க. பத்துப் பொண்ணுங்க உக்காந்துருக்காங்க. பக்கத்துலயே பாருங்க. எவ்ளோ ஆம்பளைங்க எதுவுமே சொல்லாம நிக்குறாங்கனு. இப்ப வந்து ஏறிட்டு சீட்டு வேணும் அப்டினா, முன்னாடியே வந்து உக்காந்துருக்குறவங்களாம் எப்டிமா தெரியிறாங்க? எல்லாத்துலயும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண கத்துக்கோங்கம்மா" னு சும்மா நச்சென்று சொல்லி திரும்பி சென்றார்.

செ.த.பெண்மணிக்கோ, என்ன செய்வதென்றே தெரியாமல் நிற்கையில், ஆடவர் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பொண்ணு எழுந்து, அப்பெண்மணிக்கு அமர இடம் கொடுத்து நின்றார்.

இதைக் கவனித்த அந்த இளைஞன் எழுந்து நிற்கின்ற அப்பொண்ணுக்கு இடம் கொடுக்க விளைந்தார். அதை நோட்டமிட்ட அந்தச் சின்னப் பொண்ணு "உக்காருங்க சார்"னு சொல்றாங்க.

அவன் : "இல்ல, பரவால்லங்க. நீங்க உக்காருங்க"னு எழுந்து இடம் கொடுத்துட்டான்.

மகளிர்குழு 5 பேர் : "தம்பி, நீங்க உக்காருங்க, பரவாயில்ல"னு சொல்றப்பயும், அந்த இளைஞன் கேட்கல.

சின்னப்பொண்ணு : "போங்க, நான் உக்காரப்போறது இல்ல"

அவன் : "ஏன்?"

சி.பொண்ணு : "பின்ன என்னங்க?! இப்பத்தான் கண்டக்டர் சார் சொல்லிட்டுப்போறாரு. நீங்க உக்காந்தா என்ன தப்பு? அந்தம்மா புடிவாதமா உங்களத்தான் எந்திரிக்க வைக்கமுயற்ச்சித்தாலும், நீங்க மறுபடியும் எங்களுக்கே உக்கார சீட்டு கொடுக்குறீங்க. சாரிங்க சார்.. ஒருசில பொம்பளங்கனால, எல்லாப்பொண்ணுங்களுக்கும் கெட்டப்பேரு தெரியுமா? நீங்க உக்காருங்க, "

மகளிர்குழு (5 பேர்) : "சரியா சொன்னம்மா."

இதையெல்லாத்தையும் அந்த 'கறார்' செ.த.பெண்மணிக்கு 'பளார்' என்றிருந்ததுபோலும்.! தன் தவறை உணர்ந்தார் போலும்.! சிறுது நேரத்தில், எழுந்து இடதுப்புறமிருந்த காலியான மகளிருக்கான இருக்கையில் அமர்ந்துக்கொண்டார்.

அடுத்த விசில் சத்தத்தில், எனது பேருந்து நிறுத்தத்தை நான் அடைந்தவுடன் இறங்க முற்படும் முன்னர், அந்த சின்னப்பொண்ணைப் பார்த்தேன். புன்முறுவலுடன் எனைப்பார்த்தபடி. பின்னர், செ.த.பெண்மணியும் என்னைக்கண்டு புன்னகைத்தார். இறுதியில் நம்ம 'பஞ்ச்' நடத்துநரிடம் ஒரு பெரிய சல்யூட் அடித்துவிட்டு, பேருந்தை விட்டு இறங்கினேன்.

என்னங்க அவுங்களாம் எதுக்கு என்னப்பாத்து புன்னகை செஞ்சாங்கனு பாக்குறீங்களா? வேற ஒண்ணுமில்லங்க. அந்த இளைஞன் வேற யாரும் இல்ல, சாட்சாத் இந்த 'அங்குராசன்' தான்..

நல்ல ஒருமனநிறைவு எல்லார்ட்டயும் இருந்துச்சுனு மட்டும் என்னால அடிச்சு சொல்லமுடியும்..

மங்கையற்க்கரசிங்க அட்டூழியங்கள் எல்லாம் கூடிக்கிட்டேப்போகுதுனு சொல்லியிருந்தேன், கடந்தப்பதிவுல.. அதை திருப்பி எடுத்துக்கொள்கிறேன். ஏன்னா, சொக்கத்தங்கமான மங்கையற்க்கரசிங்க நிறையப்பேர இன்னிக்கு பார்த்துட்டேன்... மனமுழுதுமகிழ்ச்சி!!!!

***

"பேருந்தில் அமர்வதற்கென என்ன இருக்கைக் கிடைச்சாலும் உட்காந்துக்கலாமுங்க.. அதே வேளையில் வருகின்ற பேர்களில், நம்மளவிட அவுங்களுக்கு இருக்கை தேவைப்படுது அப்டினா, மறுக்காமல் தாமாக முன்வந்து, உக்காருவதற்கு இருக்கையைக் கொடுக்க முற்படலாமுங்க.. மனிதம் வளரட்டும்!"

‍~ செ. அங்கு இராசன்.
04/06/2016, சனிக்கிழமை.